Which item can be kept in Fridge
கோடையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வீட்டு உபயோகப் பொருட்களில் முக்கியமானது ஃபிரிட்ஜ். இதில் உணவுப்பொருட்களைச் சேமிப்பது சரியா, எந்தப் பொருட்களை எத்தனை நாட்கள் சேமிக்கலாம்? உணவியல் ஆலோசகர்கள் என்ன சொல்கிறார்கள்?
“உருளைக்கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்த அவசியமில்லை. இயற்கையாகவே இந்தப் பொருட்கள் அறை வெப்பத்தில் நீண்ட நாள்கள் தாக்குப் பிடிக்கும். இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கும்போது நுண்ணுயிரிகள் எளிதில் உருவாகி, பெருகும். இதனால் அந்தக் காய்கறிகளின் தன்மையே மாறிவிடும். அவற்றைச் சமைத்துச் சாப்பிடும்போது ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது.
பீன்ஸ், தக்காளி, கேரட், காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளைத் தேவைப்பட்டால் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். எந்தக் காய்கறியாக இருந்தாலும் அதிகபட்சம் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம். தக்காளி விலை குறைவாக இருக்கிறது என்று கிலோ கணக்கில் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃபிரிட்ஜில் இருக்கும் ஈரப்பதம் அதிகமாக உள்ளிழுக்கப்பட்டு, எளிதில் நுண்ணுயிரிகள் உருவாகிவிடும் என்பதால் வாழைப் பழங்களை ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாது. குளிர்ந்த வெப்ப நிலையில் விளையும் பழங்கள் அல்லது குளிர் வெப்ப நிலையில் வைத்துப் பராமரிக்க வேண்டிய பழங்கள், உதாரணத்துக்கு ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.
வீட்டில் தயாரிக்கும் ஃபிரஷ் ஜூஸ் வகைகளை அதிகபட்சம் 2-3 நாள்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம். அவற்றில் சிறிது எலுமிச்சைச்சாறு, புதினா சாறு சேர்த்தால் கெட்டுப்போகும் தன்மை சற்று குறையும். வீட்டில் தயாரிக்கும் மில்க் ஷேக், ஸ்மூதி போன்றவற்றை சில மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.
சத்துகள் நிறைந்து காணப்படும் கீரை வகைகளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும்போது அவற்றின் சத்துகள் குறைவதற்கு வாய்ப்புள்ளது. பசலை, புதினா போன்ற கீரை வகைகள்தான் ஃபிரிட்ஜில் வைத்தால் சில நாட்கள் தாக்குப் பிடிக்கும். கீரை வகைகளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதாக இருந்தால் காற்றோட்டம் உள்ள பைகளில் போட்டு வைக்க வேண்டும். ஓரிரு நாட்களில் பயன்படுத்தி விடவும்.
காய்கறிகளை நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக்கூடாது. காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பு தண்ணீரில் அலச வேண்டும். நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பயன்படுத்தும்போது மீண்டும் அலசக்கூடாது. நறுக்கி வைப்பதாலும், மீண்டும் கழுவுவதாலும் அவற்றிலிருக்கும் தண்ணீரில் கரையக்கூடிய வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள், நுண் ஊட்டச்சத்துகள் என அனைத்தும் குறைந்து விடும்.
தோல் உரிக்கப்பட்ட சின்ன வெங்காயம், பூண்டு போன்றவை கடைகளில் கிடைக்கின்றன. வேலை எளிதாக முடியும் என்பதால் பலரும் அவற்றை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அவற்றில் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனங்கள் சேர்க்கப்படும் என்பதால் அவற்றை வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
சமைத்த உணவுகளை அதிகபட்சம் 2 நாட்கள் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து நேரடியாக சூடுபடுத்தக்கூடாது. அறை வெப்பநிலைக்கு வரும்வரை வைத்திருந்து, 15 நிமிடங்கள் நன்றாக சூடுபடுத்த வேண்டும். அப்போதுதான் அவற்றிலிருக்கும் கிருமிகள் அழியும். ஒருமுறை மட்டுமே சூடுபடுத்திச் சாப்பிட வேண்டும். ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஃபுட் பாய்சன் ஏற்படலாம்.
காய்கறிகள், பழங்கள், அசைவ உணவு என எந்தப் பொருளாக இருந்தாலும் தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. தேவைக்கேற்ற அளவில் சமைப்பதும் நல்லது. அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும் ஃபிரிட்ஜில் சேமிக்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கொண்டு வந்தால் உடல்நலத்தைப் பாதுகாக்கலாம்” என்கிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
KKR Vs SRH: மொகத்துக்கு நேரா ‘இப்படி’ பண்ணிட்டாரே… வைரலாகும் ‘கத்துக்குட்டி’ வீரரின் செயல்!
SRH vs KKR: இப்டித்தான் எங்களுக்கும் இருந்துச்சு… கம்மின்சை ‘சைலண்ட்’ ஆக்கிய ஷாரூக் டீம்!
“நறுக்கி ஃபிரிட்ஜில் வைத்து எடுத்துப் பயன்படுத்தும்போது மீண்டும் அலச வேண்டும்”. என்பது தவறு.
அலசக்கூடாது என்பதே சரி.
இதற்கு முந்திய வரியிலும் அடுத்த வரியிலும் தவறு என்பதற்கான காரணத்தை அவரே குறிப்பிட்டுள்ளார்.
பதிவு செய்யும்முன் படித்துப்பார்த்து பதிவிடுங்கள்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் துருக்கி முதல் பிலிப்பைன்ஸ் வரையுள்ள வெப்ப மண்டல நாடுகளுக்கு பொருந்தும்
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷியா போன்ற குளிர் பிரதேஷ நாடுகளுக்கு பொருந்தாது.
ஆகவே தத்தமது நாடுகளில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், சீதோசனநிலை, உணவு பழக்கவழக்கம் ஆகியவருக்கு ஏற்ப பழகி கொள்ளுங்கள்.
பல நவீன கருவிகள் மேற்கத்திய நாடுகளின் பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு கண்டுபிக்கப்பட்டன