கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… கடல், ஆறு, ஏரி… இன்று எந்த மீனை வாங்கப் போறீங்க?

மீன் உணவில் குழம்பு, வறுவல், புட்டு என்று பல வகைகள் இருப்பதுபோல மீன்களிலும் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன் என்று பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நீர் நிலைகளிலிருந்தும் கிடைக்கும் மீனுக்கென்று தனிப் பெயர்களும், தனி ருசியும் உண்டு. அதுபோல் அவற்றின் ஊட்டச்சத்துகளும் சிறிது மாறுபடும். இந்த நிலையில் கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்களில் இன்று  எந்த மீனை வாங்கப் போகிறீர்கள்?  இவற்றில் யாருக்கு எது சிறந்தது என்பது பற்றி விளக்கமளிக்கிறார்கள் டயட்டீஷியன்ஸ்.

“மீன் உணவு அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்தது. கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்கள் போன்றவை வளர்வது வெவ்வேறு சூழலில் உள்ள நீர் நிலைகளில்தான் என்றாலும் அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீனில் புரதச்சத்து மிகவும் அதிகம், மற்றும் கொழுப்பு மிகவும் குறைவு. இதனால், அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஓர் உணவாக மீன் உள்ளது.

ஆற்று மீன் மற்றும் கடல் மீன் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால் ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும். ஆனால், கடல் மீன்கள் கடலில் வளரும் கடல்பாசிகளை உட்கொண்டு வளர்வதால் அவற்றில் ஒமேகா-3 போன்ற குறிப்பிட்ட சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே, இவற்றைச் சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 உள்ளது. ஆனால், ஆற்று மீன்களில் இந்தக் கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை.

குறிப்பாகக் கடல் மீன்களில் பெரிய மீன்களைவிடச் சிறிய மீன்களில்தான் இந்த ஒமேகா-3 நிறைந்துள்ளது. உதாரணமாக மத்தி, காணங்கெளுத்தி, சங்கரா போன்ற மீன்களில் ஒமேகா-3 அதிகம் உள்ளது. இந்த ஒமேகா-3 உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் மிகவும் சிறந்தது. இது உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது. இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கும், மூட்டுவலியால் அவதிப்படுவோருக்கும் இந்தக் கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் மத்தி, சங்கரா போன்ற ஒமேகா-3 அதிகம் உள்ள மீன்களில் இருந்து மீன் வாடை அதிகம் வருவதாலும், அவற்றில் முள் அதிகம் உள்ள காரணத்தாலும் பெரும்பாலானோர் அவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்கின்றனர். உண்மையில் பெரிய மீன்களில் உள்ளவற்றைக் காட்டிலும் இவற்றில் அதிக ஊட்டச்சத்துகள் உள்ளன. ஆற்று மீன்களோடு ஒப்பிடும்போது கடல் மீன்களில் சிறிது உப்பு அதிகமாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், அவை உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் பாதிக்காது.

இறைச்சி உணவுகளில் கொழுப்பு அதிகம் உள்ளது என்பதால் அதைச் சாப்பிடுவதில் உடல்நிலை காரணமாக சிலருக்கு வரையறைகள் இருக்கும். ஆனால், மீன்களில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தப் பொருள்களும் இல்லை என்பதால் மீன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற, சிறந்த ஓர் உணவாக உள்ளது. பால் சுறா, நெய் மீன் போன்றவை பாலூட்டும் தாய்மார்களின் பால் சுரப்புக்கு உதவுகின்றன. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கின்றன. பொதுவாகவே மீன் உணவுகள் பார்வைத் திறனை மேம்படுத்தக்கூடியவை. சிலருக்கு மட்டும் சில மீன் வகைகளால் ஏதாவது ஒவ்வாமை ஏற்படலாம். அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் ஆறு, ஏரி, கடல் மீன்கள் என அனைத்து மீன்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இன்று சண்டே மட்டுமல்ல.. வாரத்தில் இரண்டு நாள்களாவது உணவில் மீன்களைச் சேர்த்துக்கொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ள மீன்கள் உணவில் தவறாமல் இடம்பிடிப்பது நலம்”  என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஃபெஞ்சல் புயல்… இதுவரை 3 பேர் உயிரிழப்பு : கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

புயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும்: செந்தில்பாலாஜி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts