குழந்தைகளைச் சாப்பிட வைப்பது என்பது பெற்றோருக்கு மிகவும் சவாலான ஒரு விஷயம். அதிலும் உணவை ஊட்டுவதற்குள் போதும்போதுமென ஆகிவிடும். எந்த உணவைக் கொடுத்தாலும் `வேண்டாம்’ என்று குழந்தைகளுக்கு இந்த வரகு – பச்சைப் பயறு உப்புமா செய்து கொடுக்கலாம். இதில் நிறைந்துள்ள புரதச்சத்து, குழந்தைகளின் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் உடல் எடை அதிகரிப்புக்கும் உதவும். இதில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தைச் சீராகச் செயல்பட வைக்கும் என்பதால் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
வரகரிசி – 200 கிராம்
பச்சைப் பயறு – 25 கிராம்
வெங்காயம், பச்சை மிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் பச்சைப் பயறை லேசாக வறுத்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் பயறைப் போட்டு இரண்டு விசில் விட்டுக் குழையாமல் வேக வைக்கவும். வரகரிசியைத் தண்ணீர் ஊற்றிக் களைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, வேகவைத்த பச்சைப் பயறு, நான்கு கப் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் வரகரிசியைச் சேர்த்து நன்றாகக் கிளறி வேக விடவும். வெந்ததும் இறக்கி கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
குக்கரில் செய்தால் ஒரு பங்கு வரகரிசிக்கு மூன்று பங்கு தண்ணீர் போதுமானது. குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே கொடுப்பது நல்லது.
டிசம்பரிலேயே மக்களவைத் தேர்தல்: டி.ஆர்.பாலு அலாரம்!