கிச்சன் கீர்த்தனா : சுசியன்

Published On:

| By christopher

‘இன்றைய குழந்தைகள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கிடைக்கும் உணவைத்தான் விரும்புகின்றன’ என்கிற புலம்பலைக் குழந்தைகள் உள்ள அநேக வீடுகளில் கேட்கலாம். இப்படிப் புலம்புவதற்கு முன் ஒரு விஷயத்தை யோசிப்போமா? நம்மில் எத்தனை பேர் பிள்ளைகளுக்குப் பாரம்பர்யமான உணவுகளை நாம் செய்து கொடுத்திருக்கிறோம்? இந்த நிலையைத் தவிர்க்க வீக் எண்ட் நாளான இன்று, சுவையான சுகியன் செய்து கொண்டு அசத்தலாமே!

என்ன தேவை?
பச்சைப் பயறு – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
வெல்லம் – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
உடைத்த முந்திரி – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – 1/3 கப்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – அரை லிட்டர்

எப்படிச் செய்வது?
அரிசியையும் உளுந்தையும் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். உப்பும் மஞ்சள்தூளும் சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். கடாயைச் சூடாக்கி, பச்சைப் பயறை வாசனை வரும்வரை வறுக்கவும். ஆறியதும் கொரகொரப்பாகப் பொடித்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தல் ஒரு கப் தண்ணீர் விட்டுச் சூடாக்கவும். பொடித்த வெல்லம் சேர்த்துக் கெட்டியான பாகு தயாரிக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். பிறகு பச்சைப் பயறு மாவு, நெய் சேர்த்துக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த் தூளும் முந்திரியும் சேர்த்துக் கலந்து ஆற வைக்கவும். கடாயில் எண்ணெய்விட்டுச் சூடானதும் தயாராக உள்ள அரிசி, உளுந்து மாவிலிருந்து சிறு துளியை எண்ணெயில் போட்டு அது உடனே பொரிந்து மேலே எழும்பி வருகிறதா என்று பார்க்கவும். தீயைக் குறைக்கவும். பூரணத்தைச் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி, அரிசி உளுந்துக் கலவையில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும். மேல் பாகம் பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். எண்ணெயை வடித்து டப்பாவில் எடுத்து வைக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share