ஆரோக்கியத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் பலரும் சிறுதானியங்கள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். சிறுதானிய உணவுகள் கிடைக்கும் ஹோட்டல்களை தேடிச் சென்று சாப்பிடுவதும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிற தானியங்களைப் பயன்படுத்தி செய்யும் உணவுகளை வீட்டிலேயே சிறுதானியங்களிலும் செய்ய முடியும். ஆனால், சிறுதானியங்களில் சமைக்கும்போது வழக்கமாகச் செய்வது போல செய்ய முடியாமல் சிரமப்படுபவர்களும் உண்டு.
ஆனால் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா, கிச்சடி, புட்டு, இடியாப்பம் என டிபன் வகைகளில் தொடங்கி, வெரைட்டி ரைஸ், பிரியாணி, புலாவ், இனிப்புகள், பாயசம் என அனைத்தையும் செய்ய முடியும். அதேபோல, சைவ, அசைவ சமையல்கள், ஒன்பாட் ரெசிப்பிகளையும் செய்யலாம். உணவைத் தயாரிக்கும் முறை அனைத்து தானியங்களுக்கும் ஒன்றுதான் என்றாலும், முன்தயாரிப்பு, வேகும் நேரம், வேக வைப்பதற்கான தண்ணீர் அளவு இவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கும்.
குறிப்பாக சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட எந்த சிறுதானியமாக இருந்தாலும் சுமார் ஐந்து மணி நேரம் ஊற வைத்த பிறகுதான் சமைக்க வேண்டும். ஊற வைக்காமல் வேக வைக்கும்போது சரியான பக்குவத்தில் வேகாது. நேரமும் அதிகமாக எடுக்கும். சுவையும் நன்றாக இருக்காது.
வரகு, குதிரைவாலி போன்றவற்றை சாதமாக சமைக்கும்போது, ஒரு கப் சிறுதானியத்துக்கு 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, ஊற வைத்த சிறுதானியத்தைச் சேர்க்க வேண்டும். மிதமான தீயில் மூடிபோட்டு வேக வைக்க வேண்டும். 10-12 நிமிடங்களில் சரியான பக்குவத்தில் வெந்துவிடும். சரியான அளவு தண்ணீர் ஊற்றுவதால் வடிக்கத் தேவையிருக்காது. அடுப்பை அணைத்த இரண்டு நிமிடங்கள் கழித்து ஒரு ஸ்பூனால் கிளறி விட்டால் உதிரி உதிரியாக வந்துவிடும். அதில் குழம்பு, கிரேவி ஊற்றியோ, வெரைட்டி சாதமாக தாளித்தோ சாப்பிடலாம்.
சிறுதானியத்துடன் புழுங்கல் அரிசி, பச்சரிசி போன்றவற்றைச் சேர்த்துச் சிலர் சமைப்பார்கள். சிறுதானியமும், இந்த அரிசியும் வேகும் பக்குவம், ஜீரணமாகும் நேரம் எல்லாம் மாறுபடும். இரண்டையும் சேர்த்துச் சமைக்கும்போது ஒன்று அதிகமாக வெந்திருக்கும், மற்றொன்று சரியாக வேகாமல் இருக்கும். இதனைச் சாப்பிடும்போது அஜீரணம், வயிற்று உப்புசம் போன்றவை ஏற்படலாம். எனவே, சிறுதானியங்களை தனியாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.
சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் காய்கறிகள் அல்லது சோயா அல்லது சிக்கன் என பிரியாணி செய்யும்போது ஒரு கப் சிறுதானியத்துக்கு இரண்டே கால் கப் என்ற அளவில் தண்ணீர் சேர்க்க வேண்டும். மட்டன் பிரியாணிக்கு மட்டனை 90% வேக வைத்துவிட்டுச் சேர்க்க வேண்டும். அப்போது ஒரு கப் அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்தால் போதுமானது. குக்கரில் வைக்கும் பிரியாணிக்கும், தம் போட்டு செய்யும் பிரியாணிக்கும் இந்த அளவு பொருந்தும். முன்பாகவே சிறுதானியத்தை ஊற வைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டால் சிறுதானியங்களில் சமைப்பதும் சுலபம்தான்.
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா: அப்டேட் குமாரு
ஹோட்டல் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால்… : விக்கிரமராஜா எச்சரிக்கை!