கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்:  நாட்டுக்கோழி முட்டையில்தான் சத்துகள் அதிகம் உள்ளதா?

Published On:

| By christopher

Are chicken eggs high in nutrients?

‘கோழி வந்ததா…முதலில் முட்டை வந்ததா’ என்ற கேள்வியைப் போலவே ‘நாட்டுக்கோழி முட்டையா அல்லது பிராய்லர் முட்டையா’ என்ற கேள்வியும் காலங்காலமாகக் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதுபற்றிய சந்தேகங்களுக்கு விடையளிக்கிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.

”நாட்டுக்கோழி முட்டை, பிராய்லர் முட்டை இரண்டிலும் சத்துகளின் அடிப்படையில் சிறிய வித்தியாசங்கள் காணப்படும். வீட்டில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் தனக்குத் தேவையானதை மேய்ந்து சாப்பிடும். அடைத்து வைக்கப்பட்டு அவற்றுக்கு கொடுக்கப்படும் தீனியை மட்டுமே சாப்பிட்டு வளர்பவை பிராய்லர் கோழிகள். நாட்டுக்கோழிகள் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளும், பிராய்லர் கோழிகள் சாப்பிடும் தீனியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகளும்தான் இந்தச் சிறிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

அதே போல இரண்டு முட்டைகளின் நிறத்திலும், அளவிலும் வேறுபாடுகள் இருக்கும். பிராய்லர் முட்டை வெள்ளை நிறத்திலும், நாட்டுக்கோழி முட்டை பழுப்பு நிறத்திலும் இருக்கும். நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சள் கரு, அடர் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் பிராய்லர் முட்டை மஞ்சள் நிறத்தில் இருக்கும். அளவில் பிராய்லர் முட்டைகள் சற்று பெரிதாக இருக்கும்.

பண்ணைகளில் முட்டைக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கு தீனியை மட்டுமே கொடுத்து அடைத்து வளர்ப்பார்கள். நாட்டுக்கோழி ரகங்களையும் தற்போது பண்ணைகளில் அடைத்து வளர்க்கிறார்கள். அப்படி வளர்க்கப்படும் கோழிகளின் முட்டையிலும் சத்துகள் சற்று குறைவாகவே காணப்படும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால்… நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat – கெட்ட கொழுப்பு) – நாட்டுக்கோழி முட்டையில் பிராய்லர் முட்டையைவிட கால் மடங்கு குறைவாக இருக்கும்.

பிராய்லர் உற்பத்தி அதிகமாக உள்ளது என்பதால் விலையும் குறைவாகக் கிடைக்கிறது. நாட்டுக்கோழி முட்டையின் விலை சற்று அதிகமாக இருக்கும். முட்டை ஓட்டில் நிறத்தைச் சேர்த்து நாட்டுக்கோழி முட்டை என சிலர் ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள். எனவே, சரியான இடத்தில் அல்லது முறையான சான்றுகளோடு விற்பனைக்கு வரும் நாட்டுக்கோழி முட்டையை வாங்கிப் பயன்படுத்துவதே நல்லது.

தரமான நாட்டுக்கோழி முட்டைகள் கிடைக்கும்பட்சத்தில், அவற்றையே தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், ‘சாப்பிட்டால் நாட்டுக்கோழி முட்டைதான் சாப்பிடுவேன்’ என்று முட்டையே சாப்பிடாமல் தவிர்க்கக்கூடாது. பிராய்லர் முட்டையிலும் புரதம், கால்சியம் போன்ற அன்றாடம் தேவைப்படும், உடலுக்கு ஊட்டம் அளிக்கும் சத்துகள் உள்ளன.

எந்த முட்டையாக இருந்தாலும் அஜீரணப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் இரவில் முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காலை அல்லது மதிய வேளையில் சாப்பிடலாம். கொலஸ்ட்ரால், சர்க்கரை நோயாளிகள் வாரத்துக்கு 2 அல்லது 3 முட்டைகள் எடுத்துக்கொள்ளலாம். மஞ்சள் கருவைத் தவிர்த்துவிட்டு வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிடலாம். முட்டைக்கு ஒவ்வாமை இருப்பவர்கள், முட்டை கலந்த உணவைச் சாப்பிட்டாலே அஜீரணப் பிரச்னை ஏற்படுகிறது என்பவர்கள் முட்டையைத் தவிர்த்துவிடலாம். மற்றவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“கூட்டணிக்குள் மோதலா?, எதிரிகள் கனவு பலிக்காது”: ஸ்டாலின் பேச்சு!

தமிழக அரசின் புதிய தலைமை கொறடா ராமச்சந்திரன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel