கிச்சன் கீர்த்தனா: வித்தியாசமான உணவு காம்பினேஷன்… உடலுக்கு நல்லதா?

Published On:

| By Selvam

முறுகலான நெய் ரோஸ்ட் தோசைக்குள் பால்கோவா ஸ்டஃப்பிங், டீயில் கைப்பிடி மிக்ஸர், மாம்பழம் சேர்த்துப் பிசைந்த பால் சாதம், கேக்குடன் கறிக்குழம்பு, இப்படி டிசைன் டிசைனாக சாப்பிடும் எத்தனையோ பேர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். ‘எதுகூட எதை வெச்சு சாப்பிட்டா என்ன… டேஸ்ட்டா இருக்கில்ல…’ என்று விளக்கமும் தருகிறார்கள்.  இது நல்லதா?

‘உணவு என்பது சுவைக்கானது மட்டுமல்ல… அது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. செரிமானம் சம்பந்தப்பட்டது. அதனால் தவறான காம்பினேஷனில் சாப்பிடுவதை இனியாவது தவிர்த்து விடுங்கள்’ என எச்சரிக்கிறார்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

எந்த உணவுடன் எதைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என முறை இருக்கிறது. அப்படிச் சரியாகச் சாப்பிடும்போதுதான் ஊட்டச்சத்துகளின் கிரகிப்பு சீராக இருக்கும். செரிமானம் நன்றாக இருக்கும். சுவை என்ற பெயரில் தவறான காம்போவில் சாப்பிடும்போது அஜீரணம், வாயுப்பிடிப்பு, வயிற்று உப்புசம், சரும அலர்ஜி என ஒட்டுமொத்த ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.

பால் செரிமானமாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அத்துடன் ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடும்போது, அவை பாலுடன் வினைபுரிந்து மிக மோசமான வயிற்றுப் பிரச்னையை ஏற்படுத்தும். இன்று பல கடைகளிலும் சிட்ரஸ் பழங்களில்கூட பால் சேர்த்து மில்க் ஷேக் தயாரித்து விற்கிறார்கள். இதைக் குடிப்பதையும் தவிர்க்கவும்.

சிட்ரஸ் பழங்களை முன்பகல் அல்லது மாலை வேளைகளில் பழமாக அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. அப்போதுதான் அவற்றின் சத்துகள் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.

பழங்கள் எளிதில் செரிமானமாகக் கூடியவை. சாதமோ, சப்பாத்தியோ, பிற பிரதான உணவுகளோ செரிப்பதற்கு சற்று தாமதம் ஆகும். எனவே, சாப்பாட்டுடன் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடும்போது, பழமானது நொதித்து வயிற்று உப்புசம், ஏப்பம், நெஞ்செரிச்சல், அசௌகர்ய உணர்வு போன்றவற்றை ஏற்படுத்தும். எனவே சாப்பாட்டையும் பழங்களையும் சாப்பிடுவதற்கு இடையில் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும். பஃபே விருந்துகளில் பலமான உணவுக்குப் பிறகு ஃப்ரூட் சாலட் சாப்பிட்டு விருந்தை முடித்துக் கொள்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

குப்பை உணவுகள் என்ற அர்த்தம் தரும் ஜங்க் உணவுகளை எப்போது சாப்பிட்டாலும் ஆரோக்கியக் கேடுதான். அவற்றைச் சாப்பிட்டதும் வயிறு வீங்கிக்கொள்ளும், வாயு பிரியும். சிலருக்கு இதனுடனும் செயற்கைக் குளிர்பானங்களை வைத்துக் கொண்டு சாப்பிடுவது ஒருவகையான ஸ்டைலாக இப்போது இருக்கிறது. நொறுக்குத்தீனிகளுடன் இந்த பானங்களைச் சேர்த்து எடுத்துக்கொள்ளும் போது பாதிப்புகள் இரட்டிப்பாகும். குடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும்.

தயிருடன் பழங்களைச் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் தவறானது. தயிரில் உள்ள பாக்டீரியா, பழங்களில் உள்ள சர்க்கரையுடன் வினைபுரிந்து, நச்சுகளை வெளியேற்றி, தீவிரமான சரும அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

தயிரோடு கீரை சேர்த்துச் சாப்பிடக் கூடாது எனப் பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். ஆனாலும் மாடர்ன் தலைமுறை அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. கீரை செரிப்பதற்கு நேரமாகும். அத்துடன் தயிரையும் சேர்க்கும்போது, குடல் தொடர்பான அசௌகர்யங்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே தயிர் இல்லாமல் தனியாக பகலில் கீரை உணவு சாப்பிடுவது சிறந்தது. தயிரை மிஸ் பண்ணவே முடியாது என்பவர்கள், கீரை சாப்பிட்டு சில மணி நேரம் கழித்துத் தயிர் சாப்பிடலாம்.

‘நமக்கெல்லாம் ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஃபில்டர் காபியோ, ஸ்ட்ராங் டீயோ உள்ளே போனாதான் திருப்தி…’ எனப் பெருமை பேசுவோரும் உண்டு. அந்த காபியும் டீயும் உள்ளே போன ஃபுல் மீல்ஸின் எந்தச் சத்தையும் உடலில் சேரவிடாமல் செய்துவிடும். காரணம், காபியில் உள்ள கஃபைனும் டீயில் உள்ள டானினும்தான். பிரதான உணவு சாப்பிட வேண்டிய நேரத்தில் அதை மட்டும் சாப்பிடவும். காபியோ, டீயோ… அதற்கான நேரத்தில் மட்டும் அளவோடு குடிக்கவும்” என்கிறார்கள்.

‘சேரிடம் அறிந்து சேர்’ என்பது உறவுக்கும் நட்புக்கும் மட்டுமல்ல… உணவுக்கும் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!

திருப்பதி: நாளை ரூ.300  ஆன்லைன் டிக்கெட்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share