பொங்கல் நெருங்கும்போதுதான் கரும்பு கிடைக்கும். ஆனால் கரும்புச்சாறு வருடம் முழுவதும் கிடைக்கும். கரும்புச்சாற்றை அப்படியே குடிப்பது தவிர, அதை வைத்து விதம் விதமான உணவுகள் செய்யலாம் என்பதற்கு உதாரணம் இந்த பாயசம். இந்த வார வீக் எண்டை கரும்புச்சாறு பாயசம் செய்து இனிப்பாகக் கொண்டாட இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
பச்சரிசி – கால் கப்
பாசிப்பருப்பு – கால் கப்
கரும்புச்சாறு – 2 கப்
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு (உடைத்தது) – ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
நெய் – சிறிதளவு
பனீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசியைத் தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெறும் வாணலியில் பாசிப்பருப்பை சிவக்க, மணக்க வறுத்துக் கொள்ளவும். பின்னர் அரிசி, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு ஒரு கப் கரும்புச்சாறு ஊற்றி ஒரு விசில் வரும்வரை வேகவிட்டு எடுக்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்த்தும் வேகவிடலாம். பின்னர் குக்கரைத் திறந்து கலவையை வாணலிக்கு மாற்றவும். பிறகு இதை அடுப்பில் ஏற்றி, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து மீதமுள்ள கரும்புச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வேகவிடவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு நெய்விட்டு சூடாக்கி, அதில் தேங்காய்ப் பல், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் சேர்த்து வறுக்கவும். இதனுடன் பனீர் துருவல் போட்டுக் கிளறி அடுப்பை அணைக்கவும். இதைக் கொதிக்கும் கரும்புச்சாறு பாயசத்தில் சேர்த்துக் கலந்து அடுப்பை நிறுத்திப் பரிமாறவும்.
குறிப்பு: இதற்குத் தனியாக வெல்லத் துருவலோ, சர்க்கரையோ தேவையில்லை. கரும்புச்சாற்றில் உள்ள இனிப்பே போதுமானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…