இந்தியில் ‘ராஜ்மா’, ஆங்கிலத்தில் ‘ரெட் கிட்னி பீன்ஸ்’, தெலுங்கில் ‘பாரிகலு’, கன்னடத்தில் ‘திங்கல நாரி’ என்று அழைக்கப்படுகிறது இந்த சிவப்பு பீன்ஸ். ராஜ்மாவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. ராஜ்மா ரத்தசோகையைப் போக்கும்; தசைகளை வலுவாக்கும் என்கிற நிலையில் இந்த ராஜ்மா புலாவ் செய்து உங்கள் வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.
என்ன தேவை?
பாஸ்மதி அரிசி – 200 கிராம்
ராஜ்மா – 100 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
வெங்காயம் – ஒன்று
கொத்தமல்லி, புதினா இலை – சிறிதளவு
புரொக்கோலி – உதிர்த்த 3 பூக்கள்
கேரட், சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 50 கிராம்
பச்சைப் பட்டாணி – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
மிளகாய்த்தூள் – முக்கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
நெய் – எண்ணெய் கலவை – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – அரை டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
ராஜ்மாவை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் சேர்த்து எட்டில் இருந்து பத்து விசில் விட்டு வேகவைக்கவும். அரிசியைக் களைந்து ஊறவைக்கவும். புரொக்கோலியை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தக்காளி, கொத்தமல்லி, புதினா இலைகள், பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை ஏற்றி நெய் – எண்ணெய் கலவையை ஊற்றிக் காயவைத்து வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து நன்கு சிவக்க வதக்கவும். பிறகு புரொக்கோலி, நறுக்கிவைத்துள்ள கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பட்டாணி மற்றும் வேகவைத்த ராஜ்மா சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, சர்க்கரையைச் சேர்த்து நன்கு வதக்கி அரைத்த விழுதைச் சேர்த்து சிறிது நேரம் சிறிய தீயில் வேகவிடவும்.
ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு தண்ணீர் அளந்து ஊற்றிக் கொதிக்கவிட்டு அரிசியை வடித்துப் போட்டு கரம் மசாலாத்தூள் மற்றும் அரை டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு குக்கரை மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். பிறகு ஆவி அடங்கியதும் நன்கு ஒரு ஃபோர்க்கால் கிளறி உடனே வேறு பாத்திரத்தில் மாற்றவும். மிக அருமையான சத்தான ராஜ்மா புலாவ் ரெடி. இதற்குத் தொட்டுக்கொள்ள தயிர்ப்பச்சடி, அப்பளம், சேப்பங்கிழங்கு வறுவல் நல்ல காம்பினேஷன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி – விஜய்… 2026 மாஸ்டர் பிளான் இதுதான்!
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்: அப்டேட் குமாரு