கிச்சன் கீர்த்தனா : ரகடா பாட்டீஸ்  

Published On:

| By christopher

என்னதான் நட்சத்திர உணவகங்களில் புதுப்புது உணவுகளை ருசித்தாலும், தெருவுக்குத் தெரு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் உள்ளூர் உணவுகளின் சுவையே தனி. மலிவான விலையில் கிடைப்பதால், இவை எளிய மக்களின் விருப்ப உணவுகளாக வரவேற்பு பெற்றுள்ளன. இருப்பினும், சுகாதாரம் கருதி நம்மில் பலர் இவற்றைத் தவிர்ப்பதுண்டு. இந்த நிலையில் மத்தியப்பிரதேசத்தில் பிரபலமான இந்த  ரகடா பாட்டீஸை வீட்டிலேயே சமைக்க இந்த ரெசிப்பி உதவும்.  

என்ன தேவை?

பாட்டீஸ் செய்ய…
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
பிரெட் தூள் – கால் கப்
பச்சை மிளகாய் – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
ரகடா செய்ய…
காய்ந்த வெள்ளைப் பட்டாணி – முக்கால் கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – அரை கப்
பொடியாக நறுக்கிய தக்காளி – அரை கப்
பச்சை மிளகாய் – பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
அலங்கரிக்க…
கிரீன் சட்னி – 4 டேபிள்ஸ்பூன்
இனிப்புச் சட்னி – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் – கால்  கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சேவ் – அரை கப்
சாட் மசாலாத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?
உருளைக்கிழங்குடன் உப்பு, பிரெட் தூள், பச்சை மிளகாய் – பூண்டு விழுது, மஞ்சள்தூள், சீரகத்தூள், மல்லித்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்துப் பிசையவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி சற்றுக் கனமாகத் தட்டவும். இதுதான் பாட்டீஸ். தோசைக்கல்லைக் காயவைத்து பாட்டீஸ்களை அடுக்கி சுற்றிலும் எண்ணெய்விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.  பட்டாணியை 10 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கிப் பச்சை மிளகாய் – பூண்டு விழுது சேர்த்து வதக்கி வெங்காயம், மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மாங்காய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, தேவையான தண்ணீர்விட்டு கொதிக்கவிடவும். அதனுடன் வேகவைத்த பட்டாணியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இதுவே ரகடா. தட்டில் 2, 3 பாட்டீஸ்களை அடுக்கி, அதன்மீது ரகடாவை ஊற்றவும். பிறகு, அதன்மீது கிரீன் சட்னி, இனிப்புச் சட்னி ஊற்றி, வெங்காயம், கொத்தமல்லித்தழையைத் தூவவும். இறுதியாக மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், சேவ் தூவிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அயலகத் தமிழர் தினம்… இத்தனை கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தமா?

அருள்தாஸ் பற்றி அந்த விஷயம் தெரியுமா? – இன்ட்ரஸ்டிங் தகவல்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel