கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி

Published On:

| By Selvam

வட இந்திய உணவான இந்த பாவ் பாஜியை அறியாதவர்கள் அபூர்வம்தான். தொடர் விடுமுறை காரணமாக வீட்டில் உலா வருபவர்களுக்கு இந்த பாவ் பாஜியைச் செய்து கொடுத்து அசத்தலாமே..?!

என்ன தேவை?

பாவ் பன் – 4
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பாஜி செய்ய..
 வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
 வேகவைத்த காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி) – கால் கப்
 குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
 தக்காளி – 4 (பொடியாக நறுக்கவும்)
 பாவ் பாஜி மசாலா – 3 டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் விழுது – 2 டீஸ்பூன் (காய்ந்த மிளகாயை 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்)
 எலுமிச்சைச் சாறு – சிறிதளவு
 பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
 வெண்ணெய், உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

காய்கறிக் கலவையை மசிக்கவும். வாணலியில் வெண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் மசித்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு பாவ் பாஜி மசாலா, காய்ந்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.  தண்ணீர் வற்றி நன்கு கிரேவி பதத்துக்கு வரும்போது ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்கவும்.

தவாவில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, பாவ் பன்களைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.  பாவ் பாஜி மசாலாவுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். மேலே கொத்தமல்லித்தழை, வெங்காயம் தூவி, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துப் பன்களுடன் சூடாகப் பரிமாறவும்.

தை மாத நட்சத்திர பலன்கள்: பூராடம்

எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்க பாத்தியா… அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share