அசைவ விரும்பிகளுக்கு மட்டுமன்றி, சைவ விரும்பிகளுக்கும் பிடித்த ஓர் உணவு காளான். அதில் விதம்விதமான உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பலருக்கும் தெரியாது. அபரிமிதமான ஊட்டச்சத்துகள் கொண்ட காளானில் வித்தியாசமாக சமைத்து இந்த வார வீக் எண்டை ஸ்பெஷலாக்குங்கள். அதற்கு இந்த இத்தாலிய உணவான காளான் லசானியா ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
காளான் – 200 கிராம் (மிகவும் சிறிதாக நறுக்கவும்)
நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப்
நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப்
தக்காளி – 6 (நறுக்கவும்)
மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
ஒரிகானோ – ஒரு டேபிள்ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – அரை ஸ்டீபூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
பூண்டு – 6 பல் (நறுக்கவும்)
பீட்சா சாஸ் – 8 டேபிள்ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 2 டேபிள்ஸ்பூன்
மயோனைஸ் – 3 டேபிள்ஸ்பூன்
துருவிய சீஸ் – 3 கப்
உப்பு – ஒன்றேகால் டேபிள்ஸ்பூன்
லசானியா ஷீட் தயாரிக்க:
மைதா – ஒன்றரை கப்
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
வெஜிடபிள் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – அரை டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான பால் – ஒரு கப்
அலங்கரிக்க:
ஒரிகானோ – சிறிதளவு
எப்படிச் செய்வது?
மைதா மாவை எண்ணெய், வெண்ணெய், அரை டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து பால் ஊற்றி பரோட்டா மாவைப் போல் நன்றாக அடித்து மாவு மென்மையாகும் அளவுக்குப் பிசையவும். மாவின் மேற்பரப்பில் எண்ணெய் தடவி ஈரத் துணியால் மூடி வைக்கவும். கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய காளான், தக்காளி, குடமிளகாய், பூண்டு, வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து மிளகுத்தூள், ஒரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், காஷ்மீரி மிளகாய்த்தூள், முக்கால் டேபிள்ஸ்பூன் உப்பு கலந்து ரொம்பவும் வதக்காமல், கிரிஸ்பியாக இருக்கும்படியாக லேசாக வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.
மைதா மாவை மூன்று பிரிவுகளாகப் பிரித்து நம்மிடம் உள்ள பேக்கிங் பான் (pan) வடிவத்துக்கு மெல்லிய ஷீட்களாக உருட்டி சற்றே காற்றில் உலர வைக்கவும். இப்போது பேக்கிங் பான் (baking pan) மேற்பரப்பில் வெண்ணெய் தடவி அதன் மேல் ஒரு 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ் பரப்பவும். அதன் மேல் ஒரு பிரஷ்ஷினால் ஆலிவ் ஆயில் தடவவும். அதன் மேல் நாம் தயாரித்த மூன்று ஷீட்களில் ஒன்றைப் பரப்பி ஒரு டேபிள்ஸ்பூன் மயோனைஸ், 2 டேபிள்ஸ்பூன் பீட்சா சாஸ், ஒரு லேயர் நாம் கடாயில் தயாரித்த ஃபில்லிங், அதற்கு மேல் ஒரு கப் துருவிய சீஸ் போடவும். மீண்டும் இரண்டு ஷீட் லேயர்களையும் இதே வரிசையில் பரப்பி கடைசியில் உள்ள சீஸ் லேயர் மேல் ஒரிகானோ தூவவும். இதை 180 டிகிரி செல்ஷியஸுக்கு பிரீஹீட் செய்யப்பட்ட அவனில் (oven) வைக்கவும். 200 டிகிரி செல்ஷியஸில் 20-ல் இருந்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அவகாசம் கேட்கும் எஸ்.பி…. சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறதா நெல்லை கொலை வழக்கு?
கொஞ்சம் டிவி, கொஞ்சம் மொபைல்: அப்டேட் குமாரு