பொதுவாக நாம் காலை உணவாக இட்லி, தோசை மற்றும் வெண் பொங்கல் போன்றவற்றையே அதிகம் சாப்பிட்டு வருகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் பாரம்பரியமாக காலை உணவாக பழைய கஞ்சி, கூல் வகைகள், புட்டு வகைகள் என உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு வகைகளை எடுத்துக் கொண்டனர். அந்த வகையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் நுண்ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவான இந்த காரப்புட்டு செய்து சாப்பிடலாம்.
என்ன தேவை?
துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப்
கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா கால் கப்
பச்சை மிளகாய் – 2,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
தாளிக்க…
முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை நீரில் ஒன்றாக ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி, வேகவைத்து எடுத்து, ஆறியதும் நீர்விட்டு உதிர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தாளிக்கும் பொருட்கள் சேர்த்துத் தாளித்து மிளகாய், உதிர்த்த இட்லியைப் போட்டுக் கிளறவும். இறக்கும் முன் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறலாம்.