ஊட்டச்சத்து மிக்க கம்பங்களியை அல்லது கூழை ருசித்திருத்தோம். அரிசியைக் காட்டிலும் கனிமம், கால்சியம், புரதம், இரும்பு என அனைத்துச் சத்துகளுமே கொண்ட தானியமாக விளங்கும் கம்பில் சுவையான அல்வா செய்தும் ருசிக்கலாம். இது வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மிகவும் ஏற்றது. kitchen keerthana kambu halwa feb 18
என்ன தேவை?
கம்பு, சர்க்கரை – தலா அரை கிலோ
நெய் – 150 கிராம்
பாதாம் அல்லது பிஸ்தா – 50 கிராம்
எப்படிச் செய்வது?
கம்பை கல் நீக்கி, சுத்தம் செய்து சுமார் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடிகட்டி, அரைத்து, பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அடி கனமான கடாயில் பிழிந்து வடிகட்டிய கம்பு பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும். பால் நன்றாக கொதித்து கெட்டியாக வரும்போது, கை விடாமல் கிளறி கொண்டே இருக்கவும். நன்றாக பச்சை வாசனை போனபின் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். பின் இத்துடன் நெய் சேர்த்துக் கிளறவும். நன்றாக கிளறி கொண்டே இருக்கும்போது பொடித்த பாதம் (அ) பிஸ்தாவை சேர்க்கவும். அல்வா கடாயில் இருந்து பிரிந்து வரும்போது அதை நெய் தடவிய தட்டுக்கு மாற்றவும். இதை ஒரு மணி நேரம் ஆறவிடவும். ஆறியபின் நமக்கு விருப்பமான வடிவத்தில் கட் செய்து பரிமாறலாம்.