வாரம் முழுக்க அவசர அவசரமாகச் சமைத்து, பரபரப்பாகப் பள்ளிக்கும் பணிக்கும் அனுப்பிவைக்கிற உழைக்கும் கரங்களுக்கு ஒருநாள் ஓய்வு தரலாமே? வீக் எண்டில் நளபாகம் படைத்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாமே? இதோ குடும்பமே சேர்ந்து சமைத்து, ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ணும் அனுபவத்துக்கான ஸ்பெஷல் ரெசிப்பி இந்த கலப்பு பருப்பு வடை.
என்ன தேவை?
கடலைப்பருப்பு – கால் கப்
துவரம்பருப்பு – கால் கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
பாசிப்பருப்பு – கால் கப்
பச்சரிசி – கால் கப்
தட்டிய மிளகு – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய இஞ்சி – ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகள் மற்றும் அரிசி சேர்த்து கலந்து தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று முறை கழுவிய பின் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் தண்ணீரை முழுவதும் வடிகட்டி கிரைண்டரில் சேர்த்து தண்ணீர் விடாமல் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் தட்டிய மிளகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிதமான சூட்டில் வைத்துக் காய விடவும். வாழையிலையில் சிறிது தண்ணீர் தடவி கலந்து வைத்துள்ள மாவை சிறிதளவு வைத்து வட்டமாகத் தட்டிக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் தட்டிய வடையைச் சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எப்போது?
“அதிமுக ஆட்சி அமைந்ததும் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு” – எடப்பாடி