இயற்கை நமக்களித்த கொடையான மூலிகைகளை நம் அன்றாட சமையலில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் உண்டு.
மூலிகைகளை இன்றைய சந்ததியினருக்கு ஏற்றாற்போல சமைத்துக்கொடுத்தால் குழந்தைகள்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட அருமையான சமையல் குறிப்புதான் இந்த ஹெர்பல் பாஸ்தா.
என்ன தேவை?
குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் கலவை – ஒரு கப்
பூண்டுப் பல் – 2 (தட்டவும்)
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கொரகொரப்பாகப் பொடித்த காய்ந்த மிளகாய் (Chilli flakes) – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பாஸ்தா – 250 கிராம்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
அலங்கரிக்க…
க்ரீம் – தேவையான அளவு
வெங்காயத்தாள் – சிறிதளவு
க்ரீன் மசாலா செய்ய…
துளசி இலைகள் – 10
சர்க்கரை – ஒரு டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை – தலா ஒரு கைப்பிடியளவு
பூண்டுப் பல், பாதாம் – தலா 6
ஓரிகானோ – கால் டீஸ்பூன்
பார்ஸ்லே – ஒரு கைப்பிடி அளவு
மிளகு – 6
பச்சை மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
க்ரீன் மசாலா செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு, உப்பு, 2 டீஸ்பூன் எண்ணெய், பாஸ்தா சேர்த்து வேகவிட்டு இறக்கி வடிக்கவும்.
வாணலியில் வெண்ணெய்விட்டு உருக்கி பூண்டு, பொடித்த காய்ந்த மிளகாய், காய்கறிகள் சேர்த்து வதக்கவும். முக்கால் பாகம் வெந்த பிறகு அரைத்த க்ரீன் மசாலா, உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
பச்சை வாசனை போன பிறகு பாஸ்தாவைச் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். மேலே க்ரீம், வெங்காயத்தாள் தூவி அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டியின் நூறாண்டு கனவு! – கன்னிப்பேச்சில் கோரிக்கை வைத்த அன்னியூர் சிவா