வீட்டில், நம் கையால் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் செய்து சாப்பிடும் திருப்தியும், சுவையும் வெளியில் வாங்கிச் சாப்பிடும் உணவுகளில் கிடைக்காது என்கிற நிலையில் வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த பச்சைப் பட்டாணி மட்ரி உதவும்.
என்ன தேவை?
மைதா – ஒன்றரை கப்
கொரகொரப்பாக பொடித்த மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன் (கையில் கசக்கவும்)
பச்சைப் பட்டாணி (ஃப்ரெஷ் அல்லது பதப்படுத்தியது) – கால் கப்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் (மாவில் சேர்ப்பதற்கு) – கால் கப்
தண்ணீர் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் (பொரிப்பதற்கு) – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். மைதா மாவுடன், மிளகு, சீரகம், ஓமம், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இத்துடன் மிக்ஸியில் பொடித்த பொடியைச் சேர்க்கவும். பிறகு கால் கப் எண்ணெயை மாவுக் கலவையில் சேர்த்து தேவையான தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து பூரி மாவு பதத்துக்குக் கெட்டியாகப் பிசையவும். இதை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி 15 நிமிடங்கள் வைக்கவும். பின்னர் எடுத்து 5 நிமிடங்கள் கைவிடாமல் பிசையவும்.
பின்னர் இந்த மாவுக் கலவையை இரண்டு பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை எடுத்து உருட்டி அரை இன்ச் கனத்துக்கு பெரிய, தடிமனான ரொட்டியைத் தேய்க்கவும். பிறகு ஒரு முள் கரண்டி கொண்டு ரொட்டியின் மத்தியில் குத்தவும். பின் விருப்பமான வடிவத்தில் அல்லது விருப்பமான கட்டர் கொண்டு வெட்டி வைத்துக்கொள்ளவும். மாவுக் கலவையின் மற்றொரு பாகத்தையும் இதேபோல் செய்யவும். எண்ணெயைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வெட்டிவைத்தவற்றை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுத்து ஆறவிட்டுப் பரிமாறவும்.