தென் மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்கள் முறுக்கு, சேவு, சீவல், மிக்சர் போன்ற பலகார வகைகள் தயாரிப்பில் பெயர் பெற்றவை. இதில் காரச்சேவுக்குப் புகழ்பெற்ற ஊராக இருப்பது விருதுநகா் மாவட்டத்தில் உள்ள சாத்தூா்தான். இந்த சாத்தூரில் செய்யப்படும் பூண்டு காரச்சேவு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அப்படிப்பட்ட பூண்டு காரச்சேவை நீங்களும் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – ஒரு கப்
மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
ஓமம் – ஒரு டீஸ்பூன் (பொடிக்கவும்)
பூண்டு – 15 பல் (தோலுரித்து, விழுதாக அரைக்கவும்)
எண்ணெய் (மாவு பிசைய) – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், பொடித்த ஓமம், பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி மாவில் ஊற்றவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். முறுக்கு பிழியும் குழலில் காராசேவ் அச்சைப் போட்டு மாவை நிரப்பிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் காரச்சேவை முறுக்குபோல் பிழிந்துவிடவும். நன்றாக வெந்து சலசலப்பு அடங்கியவுடன் எடுக்கவும். ஆறியவுடன் உடைத்து வைக்கவும்.
குறிப்பு: மாவை காரச்சேவு தேய்க்கும் கரண்டியில் வைத்து நேரடியாக எண்ணெயில் தேய்த்துவிடலாம். ஊறவைத்த மிளகாயுடன் பூண்டு சேர்த்து அரைத்தும் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…