பார்த்ததுமே நா ஊற வைத்து விடும் பார்பிக்யு உணவு வகைகள். ஆனால் வீட்டில் செய்ய முடியாதே என்ற நிலையில், தற்போது ஆன்லைன் ஸ்டோர்களில், பார்பிக்யு சார்கோல்க் கிரில் அடுப்புகள் 700 ரூபாயில் இருந்து 2,500 வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.
இந்த அடுப்புகளில் கங்குகள் போட வேண்டிய இடத்தில் கங்குகளைப் போட்டு, அதன் மேலே இருக்கும் கம்பிகளில் மசாலா தடவிய வெஜ் மற்றும் நான்வெஜ் துண்டுகளைச் சேர்த்து வேகவைத்து எடுத்தால் பார்பிக்யு கிரில் ஐட்டங்கள் தயார். இதில் சிக்கன் பார்பிக்யுவை உங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
கோழிக்கறி – ஒன்றரை கிலோ (லெக்பீஸ் கிடைத்தால் சிறப்பு)
வெண்ணெய் – 100 கிராம்
மசாலா செய்ய…
கெட்டித்தயிர் – 100 மில்லி
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையானஅளவு
எப்படிச் செய்வது?
கோழிக்கறியைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பவுலில் மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்துக்கு கலந்து கொள்ளவும். சுத்தம் செய்த கோழிக்கறியில் மசாலாவைக் கலந்து மூன்று மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
பிறகு பிரிட்ஜில் இருந்து, பார்பிக்யு அடுப்பில் வைத்து 45 நிமிடம் கிரில் செய்யவும். அவ்வப்போது கறியின் மீது வெண்ணெய் தடவவும். மேலும் எல்லா பகுதிகளும் வேகுமாறு திருப்பி விடவும். கோழி வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்.
திமுக வாக்குறுதியும் ரெட் ஜெயண்ட் பட ரிலீசும்: அண்ணாமலை விமர்சனம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!