காஜு (முந்திரி) இல்லாத தீபாவளியா? நீங்களும் இந்த ஆண்டு முந்திரியுடன் பிஸ்தாவையும் சேர்த்து இந்த சுவையான ரோல்ஸ் செய்து வீட்டிலுள்ளவர்களை மட்டுமல்ல… வீட்டுக்கு வரும் விருந்தினரையும் அசத்தலாம்.
என்ன தேவை?
முந்திரி – ஒரு கப்
பிஸ்தா – கால் கப்
சர்க்கரை (பாகு வைக்க) – அரை கப்
சர்க்கரை – 1/8 கப் (மிக்ஸியில் பொடிக்கவும்)
தண்ணீர் – கால் கப்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை ஃபுட் கலர் – சில துளிகள்
வெதுவெதுப்பான நீர் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
முந்திரி, பிஸ்தாவைத் தனித்தனியாக மிக்ஸியில் நைஸாகப் பொடித்துச் சலிக்கவும். நான்-ஸ்டிக் பானில் (Pan) தண்ணீருடன் சர்க்கரை சேர்த்து ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு காய்ச்சவும். இத்துடன் முந்திரித்தூளை சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். சிறிதளவு மாவை எடுத்து விரல்களால் உருட்டவும்.
நன்கு உருட்ட வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவிடவும். கைபொறுக்கும் சூட்டுக்கு வந்த பிறகு கையில் சிறிதளவு நெய் தொட்டுக்கொண்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு, நெய் தடவிய பலகையில் செவ்வக வடிவில் திரட்டவும்.
பிஸ்தாவுடன் பொடித்த சர்க்கரை, பச்சை ஃபுட் கலர், வெதுவெதுப்பான நீர் சேர்த்து, கையில் நெய் தொட்டுக்கொண்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிஸ்தா மாவை மெல்லிய ரோலாகச் சுருட்டவும். இதைத் திரட்டிய முந்திரியின் ஓர் ஓரத்தில் வைத்து நன்கு இறுக்கமாகப் பாய்போல சுருட்டவும். இந்த ரோலை விரல் நீள துண்டுகளாக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? – அப்டேட் குமாரு
“விளையாட்டுத் துறையும் வளர்ந்திருக்கிறது, உதயநிதியும் வளர்ந்திருக்கிறார்” – ஸ்டாலின் பாராட்டு!