மூங்கில் செடிகளின் பூக்களில் விளையும் விதைகளிலிருந்து கிடைக்கும் ஒரு வகை அரிசி, மூங்கில் அரிசி. இதில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி1, கரோட்டின், அமினோ அமிலங்கள், லினோலிக் அமிலம், பால்மிடிக் அமிலம் போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. தற்போது பலரால் விரும்பப்படும் இந்த மூங்கில் அரசியில் சுவையான லட்டு செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
மூங்கில் அரிசி மாவு – ஒரு கப் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)
வேர்க்கடலை (பொடித்தது) – கால் கப்
பாதாம் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – கால் கப்
பொடித்த வெல்லம் – ஒன்றரை கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய்விட்டு உருகியதும் மூங்கில் அரிசி மாவைச் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து ஆறவிடவும். அதனுடன் பொடித்த வெல்லம், பொடித்த வேர்க்கடலை, பாதாம் பவுடர், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். பிறகு, நெய்யைச் சூடாக்கி மாவுக் கலவையில் ஊற்றி, கைப்பொறுக்கும் சூட்டில் உருண்டைகளாகப் பிடித்துவைத்தால் சத்தான மூங்கில் அரிசி வேர்க்கடலை லட்டு தயார்.
குறிப்பு: மூங்கில் அரிசி மாவு, கவுனி அரிசி மாவு மற்றும் மாப்பிள்ளை சம்பா அரிசி மாவு தயாரிக்க அரிசிகளை நான்கு மணி நேரம் ஊறவிடவும். பிறகு நீரை வடித்துவிட்டு நிழலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடலூர்: ஆசிட் குடித்த ஆயுதப்படை போலீஸ்… மருத்துவமனையில் அட்மிட்!
டிஜிட்டல் திண்ணை: கூட்டணி டென்ஷனை குறைக்க திமுகவின் ’மாநாடு’ மாஸ்டர் பிளான்!