நீரிழிவாளர்களால் அதிகம் விரும்பப்படும் நாவல் பழத்தில் அல்வாவா? ஆம்… நாவல் பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் வைட்டமின் ஏ, சி உள்ளதால் கண் பார்வை திறனை அதிகரிக்கும். நாவல் பழம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் என்பதால் இந்த நாவல் பழ அல்வா வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.
என்ன தேவை?
நாவல் பழம் – 2 கப் (கொட்டை நீக்கியது)
கோதுமை பிரெட் – 2
நாட்டுச் சர்க்கரை – அரை கப்
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
உடைத்த பாதாம், முந்திரி – தலா ஒரு டேபிள்ஸ்பூன்
பாதாம் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
வேஃபர் கோன் – தேவையான அளவு
செர்ரி – தேவையான அளவு (அலங்கரிக்க)
நெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பாதாம், முந்திரியைத் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு கப் நாவல் பழத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு நாவல்பழச்சாற்றில் பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுச் சூடானதும் மீதமுள்ள நாவல் பழத்தைச் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் ஊறவைத்த பிரெட் விழுது, சிறிதளவு நெய்விட்டு அடுப்பை குறைந்த தணலில் வைத்துக் கிளறவும். பிறகு, ஏலக்காய்த்தூள், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது பால் பவுடர் சேர்த்து கிளறி இறக்கவும். மேலே பாதாம் துருவலைத் தூவவும். இந்தக் கலவையை ஒரு ஸ்பூனால் எடுத்து வேஃபர் கோன்களில் நிரப்பி, மேலே செர்ரி வைத்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக மோடியின் கே.கே. பிளான்… அதிர்ச்சியில் ஆர்.என்.ரவி