மாங்காய் சீசன் வந்துவிட்டது. இனி மாங்காய் ஊறுகாய், மாங்காய் ஜாம் என்று எங்கெங்கு காணினும் மாங்காய்தான் நீக்கமற நிறைந்திருக்கப் போகிறது. மாங்காய், மாம்பழம் மட்டுமல்ல; மாங்காய்த் துண்டுகளை உலர வைத்துத் தயாரிக்கும் மாவற்றலைக் கொண்டும் விதவிதமான ரெசிப்பிகளைத் தயாரிக்க முடியும். அதற்கு ஓர் உதாரணம், இந்த மாவற்றல் – பருப்பு அரைத்த குழம்பு.
என்ன தேவை?
துவரம் பருப்பு – 100 கிராம் (ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் – 14
சோம்பு – ஒரு டீஸ்பூன் (அரைக்க)
சீரகம் – அரை டீஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
மாங்காய் வற்றல் – 6 (வெந்நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுக்கவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 6 டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
சோம்பு – கால் டீஸ்பூன் (தாளிக்க)
சின்ன வெங்காயம் – 50 கிராம் (இரண்டாக நறுக்கவும்)
நறுக்கிய பூண்டுப் பற்கள் – 2
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு ஆகியவற்றை தண்ணீர்விட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து ஊறவைத்து தேவையான அளவுக்குக் கரைத்து வைத்துக்கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்திருக்கும் பருப்பு விழுது, மிளகாய் விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். பின்னர் இதனுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கி விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் நறுக்கிவைத்துள்ள பூண்டு, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அடுத்து மாங்காய் வற்றலையும் சேர்த்து வதக்கி, அரைத்துக் கரைத்துவைத்திருக்கும் கலவையை இதனுடன் சேர்க்கவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து இக்கலவையை அடிப்பிடிக்காமல் அடிக்கடி கிளறிவிடவும். கலவை பச்சை வாசனை நீங்கி கெட்டியானதும் இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோவை : கணபதி ராஜ்குமார் வெற்றி … அண்ணாமலைக்கு பின்னடைவு!
நான்கு தொகுதிகளிலும் வெற்றி… ஸ்வீப் செய்த இடதுசாரிகள்!