கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், “இந்த சீசனுக்கு ஏற்றது தயிரா, மோரா? யாரெல்லாம் தயிர் எடுத்துக்கொள்ளலாம், யாரெல்லாம் மோர் எடுத்துக் கொள்ளலாம்? எப்போது, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?.
தயிர் சூடு, மோர் குளிர்ச்சி என்கிறார்களே… இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுவதுதானே… அப்படியிருக்க ஏன் இந்த வேறுபாடு?” என்கிற கேள்விகள் பலருக்குண்டு. இதற்கான பதில் என்ன?
“தயிர், மோர் இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுபவைதான். ஒரு பொருளில் இருந்து பல உப பொருள்கள் பெறப்படலாம். அந்த எல்லாப் பொருள்களுக்கும் ஒரே குணம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படித்தான் தயிரும்.
சித்த மருத்துவத்தில் `விபாகம்’ என்று சொல்வோம். அதாவது, குணம். ஓர் உணவு செரிக்கப்பட்டு உடலுக்கு எந்த மாதிரியான குணத்தைக் கொடுக்கிறது என்று பார்த்தால் தயிரானது சூட்டையும், மோர் குளிர்ச்சியையும் கொடுக்கிறது.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் நீர் என்பது ஒன்றுதானே. ஆனாலும் கடல்நீருக்கு ஒரு குணம், குடிநீருக்கு ஒரு குணம், ஆற்றுநீருக்கு ஒரு குணம், ஊற்றுநீருக்கு ஒரு குணம் என வேறுபடுகிறதல்லவா… அப்படித்தான் இதுவும்.
கண் நோய் உள்ளவர்கள், வாயுத்தொல்லை உள்ளவர்கள், சைனஸ் மற்றும் ஜலதோஷம் உள்ளவர்கள், விஷக்காய்ச்சல் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், சரும நோய்கள் உள்ளவர்கள் ஆகியோர் எல்லாம் தயிர் எடுப்பதைத் தவிர்க்கலாம்.
மற்றவர்கள் தயிரை பகல் வேளையில்தான் எடுக்க வேண்டும். இரவில் எடுக்கக் கூடாது. தயிர் ஓரளவு புளித்திருக்க வேண்டும். இரவில் புரை ஊற்றி, அடுத்த நாள் மதியம் சாப்பிடலாம். மிதமாகப் புளித்திருக்க வேண்டும். அதிகம் புளித்த தயிர் நல்லதல்ல.
அளவாகப் புளித்த தயிர், அஜீரணம், தாகம், களைப்பு, கை, கால் எரிச்சல் போன்றவற்றை சரியாக்கும். ஆடை நீக்கிய தயிர், சிறுநீர்த்தொற்று, வயிற்றுப்போக்கு, மேகவெட்டை போன்ற நோய் உள்ளவர்களுக்கு நல்லது.
கபம், வாதம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு தயிர் கூடாது. அது மந்தத்தன்மையை உருவாக்கும். தயிரை நீர் விட்டுக் கடைந்து வெண்ணெய் நீக்கி மோராகக் குடிக்கலாம். அதனால்தான் அதை மோர் பெருக்கி என்பார்கள்.
தயிரை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்ட எல்லோரும் மோர் எடுத்துக் கொள்ளலாம். வயிறு, கல்லீரல் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வாத உணவுகளால் அலர்ஜி ஏற்பட்டவர்கள் எடுக்கலாம்.
மோர் எடுப்பதால் உடல் சூடு நீங்கும். இரவிலும் மோர் குடிக்கலாம். தாகம் போக்கும். வயிற்றிலுள்ள கிருமிகள் நீங்கும். காமாலை நோய்க்கும் நல்லது. மோர் என்பது உடலை அமைதிப்படுத்தும்.
மோரில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை என எது வேண்டுமானாலும் சேர்த்துக் குடிக்கலாம். தயிரா, மோரா… இந்த சீசனுக்கு எது சிறந்தது என்றால் மோர்தான் சிறந்தது. எல்லோரும் பயன்படுத்தக்கூடியது. அதை அமிர்தம் என்றே சொல்லலாம்” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம்: முதல்வர் நடவடிக்கை!
இது ஆரம்பம் தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெருமிதம்!