புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை லட்சுமியை விரட்ட முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பல வேலைகளை செய்ததாக கோயில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
மணக்குள விநாயகர் கோயிலில் இருந்த யானை லட்சுமி கடந்த நவம்பர் 30ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்றபோது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தது.
முதலில் யானைக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகள் இருந்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், “இறந்த யானை லட்சுமிக்கு சுகரும் இல்லை. பிபியும் இல்லை. ஒரே இடத்தில் 15 நாட்கள் நடமாட்டம் இல்லாமல் நிற்க வைத்ததால் பால் மடிபோல், வயிறு பகுதியில் நீர் தேங்கி, உணவு சாப்பிட முடியாமல் இருந்த நிலையில்,
திடீரென நடைபயிற்சிக்கு அழைத்து போனதால் மயங்கி விழுந்து இறந்தது” என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்த புலனாய்வு செய்தியை விரிவாக மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் நமக்கு புதிய தகவல்களைப் பகிர்ந்தனர்.
அவர்கள் கூறுகையில்,
“புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நாராயணசாமி முதல்வராக இருந்த காங்கிரஸ் ஆட்சியில் 2016 மே மாதம் 28 முதல் 2021 பிப்ரவரி 16 வரை பதவியில் இருந்தார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி.
அப்போது கிரண்பேடிக்கு நம்பிக்கையான ஜோதிடர் ஒருவர், “ஆளுநர் மாளிகை அருகில் உள்ள மணக்குள விநாயகர் கோயில் வாசலில், கால்களைச் சங்கிலியால் கட்டப்பட்ட பெண் யானை நிற்பது சரியில்லை.
உங்கள் அதிகார பதவிக்குக் குந்தகம் விளைவிக்கும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். அன்றாடம் போராட்டமாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஜோசியர் சொன்னதை நம்பிய துணைநிலை ஆளுநர், மணக்குள விநாயகர் கோயில் நிர்வாகத்தினரிடம் யானையை வனத்துறையில் ஒப்படைக்க ஆலோசனை கூறினார்.
கோயில் நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனே பீட்டா அமைப்பு மூலமாக நீதிமன்றத்தை நாடினார்.
யானையை வனத்துறையிடம் ஒப்படையுங்கள், இல்லை என்றால் பீட்டா போன்ற என்ஜிஒவிடம் ஒப்படையுங்கள் என்று நெருக்கடியும் கோயில் நிர்வாகத்துக்கு கொடுக்கப்பட்டது.
அந்த நேரத்தில் யானையைக் கோயிலுக்கு அழைத்து வராமல் அது வழக்கமாக தங்கும் இடமான ஈஸ்வரன் கோயில் இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தது.
அப்போது திடீரென யானைக்கு உடல் நிலை சரியில்லாமல் காலில் எல்லாம் புண்ணாகி ரணமானது. பின்னர், 2021 ஜூன் 8ஆம் தேதி காமராஜர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி கல்லூரி வளாகத்தில் விடப்பட்டது.
கிரண்பேடி துணைநிலை ஆளுநர் பதவிகாலம் முடிந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 18 ஆம் தேதி அன்று மீண்டும் மணக்குள விநாயகர் கோயிலுக்கு ஆரவாரங்களுடன் அழைத்து வரப்பட்டது லட்சுமி.
இதையடுத்து சுமார் 16 மாதங்களுக்குப் பிறகுச் சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமல் பரிதாபமாகச் சாலையில் மயங்கி விழுந்து உயிரை விட்டது” என்கிறார்கள்.
வணங்காமுடி
ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் முக்கிய உத்தரவு!
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!