சென்னை, கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் 95 சதவிகிதப் பணிகள் தற்போது நிறைவடைந்து விட்டதாகவும் பொங்கல் பண்டிகைக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,
தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உறுதியளித்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் சென்னை-திருச்சி, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும்,
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் தங்களது பயணத்தை சிரமமின்றி இனிதாக மேற்கொள்வதற்காக,
2019ஆம் ஆண்டு கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் 44.74 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் செலவில் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி,
6 லட்சத்து 40 ,000 சதுர அடியில் இரண்டு அடித்தளம் மற்றும் தரைத்தளம், முதல் தளம் கொண்ட கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் 95 சதவிகிதப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
மீதி உள்ள 5 சதவிகிதப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகைக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பஸ் நிலையத்துக்கு பொதுமக்கள் எளிதாக வந்து செல்வதற்காக கிளம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைய இருக்கிறது.
அந்த ரயில் நிலையத்திலிருந்து நேராக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வருவதற்கும், பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு பொதுமக்கள் சிரமமின்றி எளிதாக செல்வதற்காக உயர் மட்ட மேம்பாலமும் அமைக்கப்படுகிறது.
மேலும் கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையமும் வருகிறது.
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் தேவைக்கு ஏற்ப விடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ் நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்வதற்காக மேலும் 6 ஏக்கர் நிலப்பரப்பில் வணிக வளாகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பஸ் நிலையத்தில் உணவகங்கள் உள்பட 100 கடைகள் கட்டப்பட்டுள்ளன. 2,700-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 200-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பஸ் நிலையம் திறக்கப்பட்ட பிறகு சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் பாதிப்புகள் ஏற்படாதவாறு திட்டமிடப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
-ராஜ்