கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் நோக்கமே அடிபட்டு விடும் : அன்சூல் மிஸ்ரா

தமிழகம்

ஆம்னி பஸ்களை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க அனுமதித்ததால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கியதற்கான நோக்கமே அடிபட்டு விடும் என்று சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தான் தென் மாவட்டங்களுக்கு அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என ஜனவரி 24ஆம் தேதி அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல அனுமதி!

அப்போது தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘சூரப்பட்டு, போரூர், தாம்பரம் ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்க மட்டும் அனுமதிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ’அனைத்து ஆம்னி பேருந்து நிறுவனங்களுக்கும் கோயம்பேட்டில் தான் கேரேஜ்கள் உள்ளன. அதனால், கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

தங்கள் நலனைத்தான்  பார்க்கின்றனர்!

இதற்கிடையே சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.,) உறுப்பினர் செயலாளர் அன்சூல் மிஸ்ரா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “கிளாம்பாக்கம் பஸ் நிலையமே, பயணிகளுக்கு அதிக வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு 2013-ம் ஆண்டு சட்டசபையில் வெளியிடப்பட்டன.

முன்பு சென்னை அருகே பிராட்வே பகுதியில் இருந்துதான் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டன. போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேடுக்கு பஸ்நிலையம் மாற்றப்பட்டபோது. இதுபோலத்தான் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தற்போது மக்கள்தொகை பெருக்கம், போக்குவரத்து நெரிசல் காரணமாக தென்மாவட்டங்கள் செல்லும் பஸ்கள் எல்லாம் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு செல்ல பயணிகள் அவதிப்படக்கூடாது என்பதற்காக கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு 17 ரூபாய் என்ற குறைந்த கட்டணத்தில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை மாநகருக்குள் பல்வேறு பகுதிகளுக்கு 698 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 4,651 நடைகள் (டிரிப்கள்) அடிக்கப்படுகின்றன. இதுபோக வண்டலூர் ரெயில் நிலையத்துக்கு 2 ‘ஸ்மால்’ பஸ்கள் இயக்கப்படுகின்றன.

எனவே, மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஆம்னி பஸ்களை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உருவாக்கியதற்கான நோக்கமே அடிபட்டு விடும்.

மனுதாரர்கள் தங்கள் நலனைத்தான்  பார்க்கின்றனரே தவிர, பொதுமக்கள் மற்றும் அரசின் நலனை கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற வழக்குகளால், தென்மாவட்ட பஸ்கள் எங்கிருந்து புறப்படுகிறது என்ற தேவையற்ற குழப்பத்தை பயணிகள் மத்தியில் உருவாக்குகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணை ஒத்திவைப்பு!

இதனையடுத்து ’சென்னையில் அனைத்து இடங்களிலும் பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதித்தால், கிளாம்பாக்கம் செல்லும் முன்பே பேருந்துகள் நிரம்பி விடும். அதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு வந்த நோக்கமே வீணாகி விடும்” என நீதிபதியும் குறிப்பிட்டார்.

மேலும் எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளுக்கு பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களும் அடையாளம் கண்டு வரைபடம் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையைப் பிப்ரவரி 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பேட்டில் தோனி ஒட்டிய ‘ஸ்டிக்கர்’ செம வைரல்… சென்டிமெண்ட் காரணமா?

பாமாயிலுக்கு பதில் கடலை எண்ணெய்: விவசாயிகள் வலியுறுத்தல்!

+1
0
+1
3
+1
3
+1
2
+1
4
+1
1
+1
2

1 thought on “கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தின் நோக்கமே அடிபட்டு விடும் : அன்சூல் மிஸ்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *