கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

Published On:

| By Kalai

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பணிகள் 60 நாட்களில் முடிவடைந்து   வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இன்று (அக்டோபர் 13) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் உடனிருந்தனர்.

kilambakkam bus stand

 இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போது வரை என்பது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தமிழக முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

மீதமுள்ள 20% பணிகள் 60 நாட்களுக்குள் முடிவடையும். 2350 பேருந்துகள் கிளாம் பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது‌.

 இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டு இருக்கிறது. இதேபோல் பேருந்து நிலையத்தின் எதிரே ரயில் நிலையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கலை.ரா

சென்னை: ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை!

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை ?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share