சென்னையில் கடத்தப்பட்ட 7ஆம் வகுப்பு மாணவன், கடத்தல் காரர்களிடமிருந்து சமயோசிதமாக குதித்து தப்பித்திருக்கிறான்.
சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த அரவிந்த் ஷர்மா பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் மித்திலேஷ் குமார், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவன் மித்திலேஷ் தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மதியம் 2.30மணியளவில் பள்ளி முடிந்த பின்பு மாணவர்களை அழைத்து செல்ல ஆட்டோ ஓட்டுனர் வந்திருக்கிறார்.
அப்போது, சிறுவன் மித்திலேஷை ஆட்டோவின் அருகே நிற்க கூறிவிட்டு மற்ற மாணவர்களை அழைத்து செல்ல பள்ளிக்குள் சென்றபோது, ஆட்டோ அருகே வந்த அடையாளம் தெரியாத நபர், சிறுவனை தாக்கி அவரது ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றுள்ளார்.
பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் ஆட்டோ நின்றபோது, திடீரென சிறுவன் மித்திலேஷ் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து தப்பி சென்றுள்ளார்.
பின்னர் சிறுவன் அருகே இருந்த பச்சையப்பன் கல்லூரி மெட்ரோவில் ஏறி சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்த போலீசாரிடம் இருந்த செல்போன் மூலம் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சிறுவனின் பெற்றோர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சிறுவனை மீட்டு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக இன்று(அக்டோபர் 28) சிறுவனின் தந்தை அரவிந்த் ஷர்மா கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் பள்ளி வளாகத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கடத்தியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கேட்டு மிரட்ட கடத்தப்பட்டாரா அல்லது தொழிற்போட்டி காரணமாக கடத்தப்பட்டாரா என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலை.ரா
கோவையில் நடந்தது தற்கொலைப்படை தாக்குதல் – வெடித்த அண்ணாமலை
தமிழக கோயில்கள் என்ன சத்திரமா? – தனிநபர் யாகம் நடத்த உயர் நீதிமன்றம் தடை!