தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகியது குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு விளக்கமளித்துள்ளார்.
நடிகை குஷ்பு 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், மணிப்பூர் சம்பவம், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி குஷ்பு வாய் திறக்கவில்லை என்று சமூகவலைகளில் விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 14), குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இன்று பாஜக கட்சி அலுவலகமான ‘கமலாலயத்தில்’ சுதந்திர தினத்தைக் கொண்டாடிய குஷ்பு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, தனது ராஜினாமா குறித்து விளக்கமளித்தார்.
அவர் பேசுகையில் ” தேசிய மகளிர் ஆணையத்திலிருந்ததால், கட்சி வேலைகளில் முழுவதுமாக ஈடுபட முடியவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு நான் கமலாலயத்துக்கு வரவில்லை. ஒன்றரை வருடம் கழித்து தான் வந்திருக்கிறேன். கட்சி சார்பாக, பாஜக காரியகர்த்தாவாக வேலை செய்ய வேண்டும் என்று ஆசை. என்னக்கு இந்த பொறுப்பு கொடுத்த பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு நன்றி.
நான் எப்போதும் ஒரு பேரம் பேசிவிட்டு வாழ்க்கையில் நடப்பது கிடையாது. இந்த பொறுப்பில் இருந்ததால் கட்சியை ஆதரித்து கூட என்னால் பேச முடியவில்லை. ஆனால் இப்போது முழுவேலையாக கட்சி பணியில் இறங்கவுள்ளேன்.
ராஜினாமா செய்யச் சொல்லி எனக்கு எந்த வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. கட்சியை நம்பி, பிரதமர் மோடியை நம்பி பாஜகவில் இருக்கிறோம்.” என்றார்.
மேலும் அவர் ” கடந்த 10 ஆண்டுகளில் பாரத தேசம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று நாம் பார்க்கலாம். இன்று கூட 2047-இல் நம் நாடு உலகின் மிகப் பெரிய மக்களாட்சியாக மாறுவதற்கும், மிகவும் சக்தி வாய்ந்த நாடாக மாறுவதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதி பேசியுள்ளார். நாட்டின் முன்னேற்றம்தான் முக்கியம், தனிப்பட்ட முன்னேற்றம் முக்கியமில்லை. நாடு முன்னேறினால்தான் நாமும் முன்னேற முடியும்” என்றார்.
அப்போது செய்தியாளர்கள் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு, “ஆரம்பித்துவிட்டீர்களா… அடுத்தது என்ன நடக்க போகிறது என எனக்கே தெரியவில்லை.
நான் 6, 7 மாதங்களுக்கு முன்பே ராஜினாமா பற்றி பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் பி.எல். சந்தோஷ் ஆகியோரிடம் பேச ஆரம்பித்துவிட்டேன்.
ஜூலை மாதமே நான் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டேன். நேற்றுதான் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றார் குஷ்பு.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உயர்ந்த வெள்ளி விலை… தங்கம் விலை நிலவரம் என்ன?
தகைசால் தமிழர் விருது பெற்றார் குமரி அனந்தன்
ஆளுநரின் தேநீர் விருந்து: பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்