கேலோ இந்தியா விளையாட்டு நிதி: தமிழகத்துக்கு குறைவு!

தமிழகம்

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4.32 கோடி மட்டுமே ஒதுக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு தரப்பில் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் ஒதுக்கப்படுவதாக விமர்சனம் எழுந்து வருகிறது.

குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான தகவலின்படி, குஜராத், உத்தரப்பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கியிருந்தது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது.

அதேநேரத்தில், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ரூ.50 கோடிக்கு குறைவாகவும், கேரளாவில் மட்டும் ரூ.62.74 கோடியும் ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒதுக்கும் நிதி விவகாரம் மீண்டும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுஜித் குமார் குப்தா, ‘விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது’ எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்துள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், ’பாஜக ஆளும் குஜராத் மாநிலத்துக்கு 285 கோடி ரூபாயும், உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.46 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தென் மாநிலங்களுக்கு மிக சொற்பமாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு ரூ.4.32 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆசியப்போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், சர்வதேசப் போட்டிகள் எனப் பலவற்றிலும் பங்கு பெற்று பரிசுகளை அள்ளி வரும் நிலையில், அவர்கள் வசிக்கும் இந்த மண்ணுக்கு மட்டும் குறைந்த அளவில் நிதியை ஒதுக்கியிருப்பது மீண்டும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. அவர்களுடைய திறமையை அறிந்து அதிகளவில் நிதியை ஒதுக்க வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் குரலாக இருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

விவாகரத்து: சோகத்தில் ஹன்சிகா குடும்பம்!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த உச்ச நீதிமன்றம்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.