சென்னையில் தாம்பரம் அருகே கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
கேரளா மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் 19வயதான நிகிதா. இவர் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவர் தனது கல்லூரி படிப்பிற்கு இடையே அப்பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் பகுதிநேர ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று பணிக்காக செல்லும் போது தாம்பரம் அடுத்த இரும்புலியூரில் உள்ள ரயில் தண்டவாளத்தை செல்போனில் பேசியபடி கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் உடல்சிதறி சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த ரயில்வே போலீசார் உயிரிழந்த நிகிதாவின் உடலை கைப்பற்றி பல்லாவரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நிகிதா ஆண் நண்பருடன் தண்டவாளத்தில் பேசியபடி சென்றதும், அருகே ரயில் வந்தது அறிந்தும், அதிர்ச்சியில் தண்டவாளத்தை விட்டு அவர் விலகாமல் நின்றதும் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.
ரயில் வரும்போது தண்டவாளத்தை கடக்கக்கூடாது, செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்கக்கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தாலும் இதுபோன்ற சோகச் சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாக உள்ளன.
குறிப்பாக சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் தொடர்ச்சியாக இதுபோன்ற உயிரிழப்புகள் நடந்து வருகின்றன.
கடந்த அக்டோபர் மாதம் வண்டலூர் ரயில் நிலையத்தில் கல்லூரி பயிலும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவரும் இதேபோல் விரைவு ரயிலில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
வான்கடே ஸ்டேடியத்தில் சச்சினுக்கு காத்திருக்கும் பர்த்டே கிப்ட்!
க்ளைமாக்ஸை இப்போதே கேட்டால் எப்படி”?: திமுக கூட்டணி குறித்து கமல்