healthy and tasty kerala plum cake

கிச்சன் கீர்த்தனா : கேரள ப்ளம் கேக்

தமிழகம்

வருடம் முழுவதும் வகை வகையான உணவுகளை ருசித்திருந்தாலும், வருடக் கடைசியில் ஸ்பெஷலான உணவை ருசிக்க வேண்டும் என்பதுதான் பலரது ஆசை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கேரள ப்ளம் கேக் ரெசிப்பி உதவும். வீட்டிலேயே செய்து வருடத்தின் கடைசி நாளை கொண்டாட இந்த ஸ்பெஷல் கேக் பெஸ்ட் சாய்ஸ்.

அரை கிலோ கேக் செய்ய என்ன தேவை?

மைதா மாவு – 150 கிராம்
சர்க்கரை  – 150 கிராம்
முட்டை  – 2
எண்ணெய்/உருக்கிய வெண்ணெய் – 50 மில்லி
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்
உப்பு – கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய் – 4
பட்டை – 2 இன்ச்  நீளத்துண்டு
கிராம்பு – 6
டூட்டி ஃப்ரூட்டி – 4 டேபிள்ஸ்பூன்
கிஸ்மிஸ் (உலர் திராட்சை)  – 4 டேபிள்ஸ்பூன்
முந்திரி – 1 டேபிள்ஸ்பூன்
பாதாம் – 1 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு (அ) ஆப்பிள் ஜூஸ் – அரை கப்

கேரமல் செய்ய:

சர்க்கரை – கால் கப்
தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன் கப்

ஊறவைக்க:

பாதாம், முந்திரி, கிஸ்மிஸ் (உலர் திராட்சை) இவற்றை அரை கப் ஆப்பிள் (அ) ஆரஞ்சு ஜூஸில் 24 மணி நேரம் ஊறவிடவும்.

கேரமல் செய்ய:

அடுப்பில் ஒரு அடிகனமான வாணலியை வைத்து மிதமான தீயில், சர்க்கரையைச் சேர்த்துக் கருகவிடவும். முழுவதும் கருகி நிறம் டார்க் பிரவுனாக மாறும்போது தள்ளி நின்றுகொண்டு (மேலே தெறிக்கும் என்பதால்), கொஞ்சம் தண்ணீர் சர்க்கரையில் சேர்க்கவும் தீயை அதிகமாக வைத்து நன்றாகக் கரையவிடவும். இப்போது சர்க்கரை கரைந்து கறுப்பு கலர் தண்ணீர் போன்று இருக்கும். கருகிய வாசம் வரும். இதுதான் பிளம் கேக் செய்ய தேவையான கேரமல். இதனை ஆறவைக்கவும்.

எப்படிச் செய்வது?

கேக் பானில் (6-8 இன்ச்) லேசாக வெண்ணெய் (அ) எண்ணெய் தடவவும். இதில், ஒரு டேபிள்ஸ்பூன் மைதா மாவு தூவி, பானின் எல்லா பக்கங்களிலும் ஒட்டுமாறு தட்டி வைக்கவும். ஏலக்காய், பட்டை மற்றும் கிராம்பை மிக்ஸியில் சேர்த்துப் பொடித்துக் கொள்ளவும். ஊறிய பருப்பு வகைகள், கிஸ்மிஸ் (உலர் திராட்சை), டூட்டி ஃப்ரூட்டி அனைத்தையும் ஒரு பவுலில் எடுத்து ஒன்றாகக் கலந்து, 2 டேபிள்ஸ்பூன் மைதா மாவில் புரட்டி வைக்கவும்.

ஊறியதில் மீதமிருக்கும் ஜூஸை தனியாக எடுத்து வைக்கவும்.ஒரு பவுலில் மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மற்றொரு பவுலில் உருக்கிய வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்க்கவும். இத்துடன், சர்க்கரை, முட்டை சேர்த்து நன்றாக நுரைத்துப் பொங்கும்வரை அடித்துக் கலக்கவும் (எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடித்தால், கேக் மிகவும் சாஃப்ட் ஆக வரும்).

இதனுடன் ஆறிய கேரமல் சாஸ், வெனிலா எசன்ஸ், பொடித்த ஏலக்காய் கிராம்பு, பட்டைத்தூள் சேர்த்து சிறிது நேரம் அடிக்கவும். இத்துடன் மாவுக் கலவையைச் சிறிது சிறிதாகச் சேர்த்து முட்டை அடிக்கும் விஸ்க் (whisk) அல்லது ஃபோர்கினால் மெதுவாகக் கலக்கவும் (இப்போது எலக்ட்ரிக் பீட்டர் பயன்படுத்த வேண்டாம்). பதம் இட்லி மாவைவிட கெட்டியாக இருக்க வேண்டும்.

இதில், மாவில் புரட்டி வைத்திருக்கும் டூட்டி ஃப்ரூட்டி, நட்ஸ் மற்றும் உலர் திராட்சை(கிஸ்மிஸ்), எடுத்து வைத்த ஜூஸ் சேர்த்து லேசாகக் கிளறவும். இதனை வெண்ணெய்/எண்ணெய் தடவி, மாவு தட்டி வைத்திருக்கும் பானில் ஊற்றி சமன் செய்யவும். பிறகு குக்கர் அல்லது பேக்கிங் அவனில் வைத்து பேக் செய்யவும்.

குக்கரில்  பேக்கை எப்படிச் செய்வது?  

குக்கரை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு தட்டை வைக்கவும். குக்கர் மூடியை, தலைகீழாக மூடவும். பத்து நிமிடத்தில் குக்கர் நன்றாகச் சூடானதும், உள்ளே எந்த நீர்த் துளிகளும் இல்லை என்ற நிலையில், ரெடி செய்த கேக் பேனை, குக்கரின் உள்ளே உள்ள பிளேட்டின் மேல் வைக்கவும். மறுபடியும் மூடியைத் தலைகீழாக வைத்து மிதமான தீயில் 45 நிமிடங்கள்  வேகவிடவும்.

பிறகு, மூடியை எடுத்துவிட்டு, டூத் பிக்கால் கேக் வெந்துவிட்டதா என்று குத்திப்பார்க்கவும். டூத் பிக்கில் மாவு ஒட்டினால், கூடுதலாக 10 நிமிடங்கள் தலைகீழாக மூடிபோட்டு வேகவிடவும். வெந்ததும் எடுத்து ஆறவிடவும். பிறகு, பானில் இருந்து கேக்கை வெளியே எடுத்து துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: குக்கரில் நீர் சேர்க்கத் தேவையில்லை. இது பேக் செய்வது, நீரில் வேகவைப்பது அல்ல.

அவனில் பேக்கை எப்படிச் செய்வது?

பேக்கிங் அவனை 10 நிமிடங்கள் ப்ரீஹிட் செய்யவும். 175°C அல்லது 180 °Cல் டெம்பரேச்சர் செட் செய்யவும். அவனின் உள்ளே இருக்கும் இரண்டு ராட்களையும் ஃப்ரீ ஹீட்டின் போது ஆன் செய்ய வேண்டும். பிறகு நடுவில் உள்ள டிரேவில் ரெடி செய்து வைத்த கேக் பேனை வைத்து, 40-50 நிமிடங்கள் பேக் செய்யவும் (கேக் பானின் அளவைப் பொறுத்து நேரம் மாறுபடும்).

பாகற்காய் சுகியன்

எக்லெஸ் ப்ளம் கேக்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *