காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சென்னைக்கு வேலை தேடி வந்த கேரளாவைச் சேர்ந்த காதல் ஜோடி ரயில் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷரீப் மற்றும் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், கேரளாவில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வந்துள்ளனர்.
கூடுவாஞ்சேரி அருகே உள்ள நண்பர் ஒருவர் உதவியுடன் வேலை தேடுவதற்காக இருவரும் சென்னை வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.
இரவு 8.30 மணியளவில் கூடுவாஞ்சேரி – பொத்தேரி இடையே ரயில்வே தண்டவாளம் அருகே பேசியபடி நடந்து சென்றுள்ளனர். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் காதல் ஜோடி மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் முகமது ஷரீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ஐஸ்வர்யாவை ரயில்வே போலீசார் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யாவும் உயிரிழந்தார். ஐஸ்வர்யா நான்கு மாதம் கர்ப்பமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் தற்செயலாக நடந்து செல்லும் போது விபத்து ஏற்பட்டதா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உயிரிழந்த காதல் ஜோடியின் பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அண்ணன் வர்றார் வழிவிடு… ‘கோட்’ ஸ்பெஷல் ஷோ-க்கு பெர்மிஷன் கிடைச்சாச்சு!
நித்யானந்தா ஆஜராக மறுப்பு : மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!