கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண்களின் உடலை வெட்டியது எப்படி என்று பொம்மை உடல் வைத்து குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பணக்காரராக ஆசைப்பட்டு பாரம்பரிய மசாஜ் சென்டர் உரிமையாளர் பகவல்சிங், அவரது மனைவி லைலா, மந்திரவாதி ரஷீத் ஆகிய 3 பேர் சேர்ந்து 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் கேரளாவை உலுக்கியது.
லாட்டரி விற்கும் தொழில் செய்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த பத்மா, எர்ணாகுளம் மாவட்டம் காலடி பகுதியை சேர்ந்த ரோஸ்லின் ஆகிய இருவரையும், சினிமாவில் நடிக்க வைத்து லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அழைத்துச் சென்று நரபலி கொடுத்திருக்கின்றனர்.

தாயை காணவில்லை என்று பத்மாவின் மகன் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய கொச்சி போலீசார், பகவல்சிங், லைலா, ரஷீத் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
2 பெண்களையும், நிர்வாண நிலையில் கை, கால்களை கட்டிப்போட்டு தலையில் சுத்தியால் அடித்தும், கழுத்தை அறுத்தும் நரபலி கொடுத்துள்ளனர். அத்துடன் உடல்களை 60 துண்டுகளாக வெட்டி பல இடங்களில் குழி தோண்டி புதைத்திருக்கின்றனர்.
நரபலி கொடுக்கப்பட்டவர்களின் ரத்தத்தை வீடு முழுவதும் தெளித்தும், இளமையான தோற்றம் வேண்டும் என்பதற்காக அவர்களது மாமிசத்தை உண்டதாக அவர்கள் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கைதான 3 பேரும் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கொச்சி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 பெண்கள் காணாமல் போயிருக்கின்றனர். பத்மா, ரோஸ்லி நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் வட்டத்தில் மட்டும் 3 பெண்கள் மாயமாகியிருக்கின்றனர்.

எனவே இதில் ரஷீத், பகவல்சிங், லைலா ஆகியோருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்த போலீசார், 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். அதன்படி 12 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க எர்ணாகுளம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அவர்களிடம் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பகவல்சிங்கின் வீட்டில், பிரிட்ஜில் கிலோ கணக்கில் மனித மாமிசம் இருப்பதை கண்டறிந்தனர். எனவே உறுப்பு திருட்டுக்காக இந்த கொலைகள் நடந்ததா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொல்லப்பட்ட பத்மாவின் உடலில் இருந்து இதயம், ஈரல் உள்ளிட்ட உறுப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் சம்பவம் நடந்த பகவல்சிங் வீட்டில் பொம்மை உடல் வைத்து வைத்து நேற்று(அக்டோபர் 21) மாலை விசாரணை நடத்தப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக நேரடி சாட்சிகள் இல்லாத காரணத்தினால் பொம்மை உடல் வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உடலில் காயம் ஏற்படுத்துதல் மற்றும் கொல்லப்பட்டவர்களுடைய உடல் எந்த அளவுக்கு துண்டுகளாக வெட்டப்பட்டது என்பது குறித்து பொம்மை உடலை வைத்து நேரடி ஆய்வு செய்யப்பட்டது.
இந்த விசாரணையின் போது காவல்துறையினரும், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களும், தடய அறிவியல் நிபுணர் குழுவினர்களும் இருந்தனர். விசாரணையின் போது ரஷீத், பகவல்சிங் இருவர் மட்டுமே அழைத்து வரப்பட்டிருந்தனர்
தற்போது 12 நாள் போலீஸ் காவல் 23 ஆம் தேதி நிறைவு அடைய உள்ளது. அவர்கள் 3 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலடியில் காணாமல் போன ரோஸ்லின் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மறுபடியும் போலீஸ் காவலில் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கலை.ரா
மீரா மிதுனை காணவில்லை: தாய் பரபரப்பு புகார்!
மாநில அரசு தொலைக்காட்சி: ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை!