கேரளா ஓணம் லாட்டரி முதல் பரிசான ரூ.25 கோடி கோவையை சேர்ந்த நபர் ஒருவருக்கு கிடைத்ததுள்ளது என்று தகவல்கள் வெளியான நிலையில் திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு லாட்டரி பரிசு விழுந்துள்ளது என்ற அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
கேரளாவில் லாட்டரி விற்பனைக்கு தடை இல்லாததால் அங்கு எப்போதும் லாட்டரி விற்பனை களைகட்டும். ஓணம் பண்டிகையை முன்னிட்டு திருவோணம் பம்பர் லாட்டரி சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி முதல் பரிசு ரூ.25 கோடி, இரண்டாம் பரிசு ரூ.1 கோடி வீதம் 20 பேருக்கும் மூன்றாம் பரிசு ரூ.50 லட்சம் வீதம் 20 பேருக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதனால் லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டுகள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். மொத்தம் 10 சீரியல்களில் 85 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இதில் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும்.
லாட்டரி பரிசு விவரங்கள் நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி பாலக்காடு வாளையாரில் விற்பனையான சீட்டுக்கு கிடைத்ததுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது.
அதன் எண் TE 230662. இருப்பினும் யாருக்கு முதல் பரிசு விழுந்தது என்ற தகவல் வெளியாகமல் இருந்தது.
இந்தசூழலில் கோவையை சேர்ந்த நடராஜன் 10 டிக்கெட்டுகள் வாங்கியதாகவும் அவருக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்தநிலையில் திருப்பூரை சேர்ந்த 4 பேருக்கு தான் முதல் பரிசு விழுந்துள்ளது என்று மலையாளம் மனோரமா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திருப்பூரை சேர்ந்த பாண்டியன், நடராஜன், குப்புசாமி, ராமசாமி ஆகிய நான்கு பேரும் செப்டம்பர் 18-ஆம் தேதி வாளையாரில் மூன்று லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கியுள்ளனர். அதில் TE 230662 லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.
நான்கு பேரும் திருவனந்தபுரம் லாட்டரி இயக்குனரக அலுவலகத்திற்கு நேரில் சென்று பரிசுத்தொகையை பெற்றுக்கொண்டனர்.
பாலக்காட்டில் சிகிச்சை பெற்று வந்த நபரை சந்தித்து நலம் விசாரித்துவிட்டு திருப்பூர் திரும்பும் வழியில் வாளையாரில் மூன்று லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தங்களது புகைப்படங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டாம் என்று லாட்டரி விற்பனையாளர்களிடம் கேட்டுக்கொண்டனர்.
ரூ.25 கோடி பரிசு பெற்ற இவர்களுக்கு வருமான வரி பிடித்தம் ரூ.6.75 கோடி, ஏஜென்சி கமிஷன் ரூ.2.5 கோடி போக ரூ.15.75 கோடி கிடைக்கும்.
செல்வம்
ஸ்டாலின் சொல்படி கோட்டை முற்றுகை : பகுதிநேர ஆசிரியர் சங்கம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
2வது நாளாக குறைந்த தங்கம் விலை!