சிவகங்கை மாவட்டம் அகரத்தில் நடைபெற்று வரும் அகழ்வாய்வில் நேற்று ( ஆகஸ்ட் 13 ) சாய்ந்த நிலையில் உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகின்றன .
இந்நிலையில், சரியான இடத்தில் அகழ்வாய்வு நடக்கவில்லை என்ற புகாருக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட் 14 ) செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பாக 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நான்காம் கட்ட அகழ்வாய்வில் தொடங்கி தற்போது வரை 8 ஆம் கட்ட அகழ்வாய்வு வரை நடைபெற்றுகொண்டிருக்கிறது.
அதற்கு முன்பு மூன்று கட்ட அகழ்வாய்வு இந்திய தொல்லியல் துறை சார்பாக செய்யப்பட்டது.

நாம் பண்ணக்கூடிய நான்காம் கட்ட அகழ்வாய்வில், நமக்கு சுடுமண்ணால் ஆன உறைக்கிணறுகள், கூரை வீடுகள் இருந்ததற்கு அடையாளமாக ஓடுகள் கிடைத்துள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

கரிம பகுப்பாய்வுக்கு உட்படுத்தும் போது தான் கீழடி நாகரிகம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன் 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தயது என்பது நமக்கு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
எனவே சங்ககாலம் என்பது கி.மு 6 ஆம் நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அந்த காலத்திலேயே எழுத்தறிவு இருந்த ஒரு நகர நாகரிகம் இருந்ததும் உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
5 ஆம் கட்ட அகழ்வாய்வை செய்யும் பொழுது ஏற்கனவே கிடைத்த செங்கல் கட்டுமானத்தின் தொடர்ச்சி கிடைத்திருக்கிறது.
அதே போல் பல்வேறு பொருட்களும் கிடைத்தது.

இந்திய புவி காந்தவியல் விஞ்ஞானிகளை வைத்து ஆய்வுகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 8 ஆம் கட்ட அகழ்வாய்விலும் நிறைய பொருட்கள் கிடைத்துள்ளது.
ஒவ்வொரு கட்டத்திலும் இடத்தை தேர்வு செய்ய இத்தாலியின் பைசா நகரம் , புதுச்சேரி , மதுரை காமராஜர் பல்கலைகழகங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரியான இடத்தில் அகழ்வாய்வு நடக்கவில்லை என்பது அடிப்படை ஆதாரமற்றது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
75 நாட்கள்… 75 கடற்கரைகள்… 7500 கிலோ மீட்டர்… விழிப்புணர்வு நிகழ்ச்சி!