கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் மற்றும் கீழடி செயலியை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 6) காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வுப் பணிகள் கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை நடைபெற்ற 8 கட்ட அகழாய்வுப் பணிகளை மத்திய தொல்லியல் துறை 3 முறையும், தமிழக தொல்லியல் துறை 5 முறையும் மேற்கொண்டுள்ளன.
அகழாய்வு மூலம் கிடைத்த பல ஆயிரம் தொல்பொருட்களைப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சிவகங்கையில் ரூ.18. 42 கோடி மதிப்பீட்டில் கீழடி அகழ் வைப்பகம் கட்டப்பட்டுள்ளது.
இதனை கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை பொதுமக்கள் உட்பட திரையுலக நட்சத்திரங்களும் குடும்பத்துடன் சென்று கண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கீழடி 9-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
கீழடி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் அகரம், கொந்தகை, கங்கைகொண்ட சோழபுரம், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, கீழ்நமண்டி, பொற்பனைக்கோட்டை, புதிநத்தம், பட்டறைப் பெரும்புதூர் ஆகிய 8 இடங்களில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற உள்ளன.
மேலும் கீழடி புனை மெய்யாக்க செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்த கீழடி அகழ்வராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை பொதுமக்கள் தங்களது மொபைலில் காண முடியும்.
கிறிஸ்டோபர் ஜெமா
7 வயது சிறுவன் பலி: நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!