மேட்டூர் அணையிலிருந்து 1.20 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்து உள்ளது.
‘இதனால் நேற்று (ஆகஸ்ட் 27) முதல் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல்16 கண் மதகு வழியாகத் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது, அணையிலிருந்து 1.20 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் இருக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், காவிரி ஆற்றில் மக்கள் இறங்கிக் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தூரத்திலிருந்து சீறி வரும் வெள்ள நீரைப் பார்த்து ரசிக்கின்றனர்.
இந்நிலையில் காவிரி-பவானி ஆறு சங்கமிக்கக்கூடிய பவானி கூடுதுறை சங்கமித்திரன் கோவிலின் பின்புறம் படித்துறை அமைந்துள்ளது. இந்த படித்துறை பகுதியில் வழக்கமாக மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள்.
ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகப் பவானி கூடுதுறையில் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மக்கள் வெள்ளம் ஏற்பட்டுள்ளதைப் பொருட்படுத்தாமல் கூடுதுறைக்கு அருகில் இருக்கும் படித்துறையில் இறங்கி ஆபத்தான முறையில் நீராடி வருகிறார்கள்.
இதற்கு சமூக ஆர்வலர்கள் பலர், மக்கள் ஆபத்தான முறையில் நீராடுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை: விவசாயிகள் புகார்!