திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட நரிக்குறவர்களால் பரபரப்பு!

தமிழகம்

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில், நரிக்குறவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, பெரம்பலூர் மாவட்டம் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவர்கள் நலச்சங்கத் தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் நரிக்குறவர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டனர்.

அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. இதனால் அங்கு வந்த நரிக்குறவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் போலீஸாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகையிட்டனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், “பெரம்பலூர் எறையூரில் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் சுமார் 350 ஏக்கர் நிலத்தை நாடோடிகளாக அலைந்த 150 நரிக்குறவர்களுக்கு வீட்டு மனையாகவும், சாகுபடி செய்வதற்காகவும் அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

46 ஆண்டுகளாக அந்த நிலத்தை உழுது சாகுபடி செய்து வருகிறோம். ஆனால் அந்த இடத்துக்கு இன்று வரை பட்டா வழங்கவில்லை. ஆகவே நாங்கள் தங்கியுள்ள வீட்டுக்கும், சாகுபடி செய்யும் நிலத்துக்கும் பட்டா வழங்கி சீர்மரபினர் பழங்குடிகளாகிய எங்களை காக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர். இதுகுறித்து, விரைவில் தீர்வு காணப்படும் என்று அங்குள்ளவர்கள் உறுதியளித்த பின்னர் கலைந்து சென்றனர்.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *