நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல் உள்ளது என அவரது முன் ஜாமீன் மனுவை இன்று (நவம்பர் 14) தள்ளுபடி செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் கடந்த 3ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மதுரை திருநகரில், தமிழக நாயுடு மகா ஜன சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன் ஜாமீன் கோரி கஸ்தூரி மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனது தீர்ப்பில் நடிகை கஸ்தூரியின் பேச்சு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே சேதத்தை ஏற்படுத்திவிட்டது!
அவர், ”தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக கஸ்தூரி பேசிய பேச்சு எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை நீதிமன்றம் பார்க்க வேண்டி உள்ளது.
‘கற்றவர்’, ’சமூக ஆர்வலர்’ என தன்னைக் கூறிக் கொள்ளும் நடிகை கஸ்தூரியின் வாயிலிருந்து வந்துள்ள வார்த்தைகள் இழிவானவை. அவரது பேச்சு வெறுப்புப் பேச்சாகவே உள்ளது. அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவியுள்ள நிலையில் அது வெடிகுண்டு போல் உள்ளது.
பேச்சுரிமை எனும் பெயரில் வெறுப்புணர்வை பரப்பவோ அல்லது சமூக மோதல்களை ஏற்படுத்தவோ கூடாது. சுதந்திரமாகப் பேசும் உரிமையை தவறாகப் பயன்படுத்தக் கூடாது.
கஸ்தூரியின் ட்வீட், மன்னிப்பு கேட்க உண்மையான முயற்சி மேற்கொண்டதாக தெரியவில்லை. இதுபோன்ற கேவலமான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மீது சட்டத்தின்படி வழக்குத் தொடரப்பட்டால், அதிலிருந்து தப்பிக்க மன்னிப்பு கோருவது இனிமேல் ஏற்றுக்கொள்ளப்படாது.
சொல்லப்பட்ட வார்த்தைகள் ஏற்கனவே வில்லிலிருந்து வெளியேறிய அம்பு போல அடைந்து சேதத்தை ஏற்படுத்திவிட்டது” என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இரு தனிப்படைகள் அமைப்பு!
முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை கைது செய்ய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
மதுரை மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் உதவி காவல் ஆணையர் குருசாமி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் துரைப்பாண்டி, மதுரை வீரன் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஸ்தூரியை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ’போலீஸ் பூத்’ : கமிஷனர் அருண் தகவல்!
அபிசேக்குடன் காதல்? : நிம்ரத் கவுருக்கு அமிதாப் கடிதம் எழுதியது ஏன்?
கங்குவா : ட்விட்டர் விமர்சனம்!
மேடை கெடச்சா, என்ன வேணாலும் பேசலாம்ன்ற மனப்பான்மை மாறனும் முதல்ல. நாம என்ன பேசனும், எப்படி பேசனும்னு முதல்ல ஒத்திகை பாக்கனும்.