தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, ஜாமீன் கேட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 18) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிராமணர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து கஸ்தூரி அவதூறாக பேசியதாக தெலுங்கு சம்மேளனம் சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கஸ்தூரி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கஸ்தூரி தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தநிலையில், ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை தனிப்படை போலீசார் நவம்பர் 16-ஆம் தேதி இரவு கைது செய்து நேற்று (நவம்பர் 17) மதியம் சென்னை அழைத்து வந்தனர்.
சிந்தாதரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கஸ்தூரியிடம் வாக்குமூலம் பெற்ற போலீசார், சென்னை எழும்பூர் நீதிமன்ற குடியிருப்பு வளாகத்தில் ஐந்தாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பாக ஆஜர்படுத்தினர்.
அப்போது கஸ்தூரிக்கு நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில், ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் கஸ்தூரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…