ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்!

தமிழகம்

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால், குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், பொய்யாமணி ஊராட்சி பங்களாபுதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவந்த மணிகண்டன் என்பவர் தன் பிறந்தநாளை பள்ளியின் ஒரு வகுப்பறையில் சக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

அப்போது அந்தப் பள்ளியின் தலைமையாசிரியை சித்ரா தேவி, ஆசிரியர் மணிகண்டனுக்கு கேக் ஊட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியை சித்ரா தேவி மற்றும் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பள்ளி தலைமையாசிரியை உட்பட இரண்டு பேரையும் மீண்டும் பணியமர்த்த வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை மாவட்டக் கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், அவர்கள் பள்ளி தலைமையாசிரியை உட்பட இரண்டு பேரும் மீண்டும் பணியில் சேரும் வரை தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி வெளியூர் சென்றுள்ளார். உயரதிகாரிகள் கவனத்துக்கு எடுத்து சென்று ஓரிரு நாளில் பணியில் சேர்க்க உத்தரவிடப்படும் என பெற்றோர்களிடம் கூறினர். இருப்பினும் அவர்களது சமரசத்தை ஏற்க மறுத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

-ராஜ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *