திருமண மண்டபத்தில் இயங்கும் வேளாண் கல்லூரி: மாணவர்கள் சாலை மறியல்!

தமிழகம்

கரூரில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக திருமண மண்டபத்தில் இயங்கி வரும் அரசு வேளாண் கல்லூரிக்கு, உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனக் கோரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்டத்தில் புதிய அரசு வேளாண் கல்லூரி அமையும் என கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 2022-ம் ஆண்டு புதிய கல்லூரி தொடங்கப்பட்டு, மாணவர் சேர்க்கையும் தொடங்கியது.

இருப்பினும் கல்லூரிக்கு என்று புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், தற்காலிகமாக கரூர் உழவர் சந்தை அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கல்லூரி நடைபெற்று வந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாணவர்கள் இந்த திருமண மண்டபத்திலேயே பாடங்களை பயின்று வந்தனர்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் 67 பேர் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 68 பேர் என்ன நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்கு பயின்று வருகின்றனர்.

கல்லூரி தொடங்கிய வருடத்தில் பயின்ற தற்போதைய மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கல்லூரிக்கு என உரிய இடம் ஒதுக்கி கட்டடம் கட்ட வேண்டும் என்றும், போதிய வசதி இல்லாமல் இருப்பதாகவும் கூறி கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இருப்பினும் இதுவரை புதிய கட்டடம் திறப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் மாணவர்கள் திடீரென பெற்றோருடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமண மண்டபம் என்பதால் போதிய வசதிகள் இல்லை எனவும், பயிற்சிக்காக வெளியே அழைத்துச் செல்லப்படுவதில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், ஆறு மாத பருவத் தேர்வுக்கு கடைசி ஒரு வாரம் மட்டும் முழு பாடத்தையும் படிக்கச் சொல்லி தொந்தரவு செய்வதாகவும், பாடங்களை நடத்துவதற்கு போதிய எண்ணிக்கையிலான பேராசிரியர்கள் இல்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ் மற்றும் ராஜா ஆகியோர் பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால், கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டனர்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: `டீஹைட்ரேஷன்’… தற்காத்துக்கொள்வது எப்படி?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்

’யாருகிட்ட என்ன கேக்குறீங்க ஆபிசர்?’ : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *