‘பசியைப் போக்குவதுடன் ருசியாகவும் இருக்க வேண்டும்’ என்பதையும் தாண்டி, உடல் ஆரோக்கியத்தை நீண்ட நாட்கள் பேணிப் பராமரிக்கவும் வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, வழி வழியாக நமக்கு வந்து சேர்ந்திருக்கும் உணவு வகைகள் ஏராளம். அவற்றில் ஒன்று இந்தக் கருணக்கிழங்குத் துவையல். மூலநோய்க்கு இது கைகண்ட மருந்து இந்தத் துவையல்.
என்ன தேவை? Karunai Kizhangu Thuvaiyal
கருணைக்கிழங்கு (சேனைக்கிழங்கு) – 200 கிராம்
புளி – நெல்லிக்காய் அளவு, பொடித்த வெல்லம் – ஒரு டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வறுத்துப் பொடிக்க…
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
தாளிக்க…
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு
எப்படிச் செய்வது? Karunai Kizhangu Thuvaiyal
கருணைக்கிழங்கைத் தோல் சீவி நன்றாகக் கழுவி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி துருவிய கருணைக்கிழங்கைச் சேர்த்து நன்றாக வதக்கவும். மிக்ஸியில் புளி, வெல்லம், அரைத்து வைத்த பொடி, வதக்கிய கருணைக்கிழங்கு சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலையைத் தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்துவிடவும்.
இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்; இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுக்கு சைட் டிஷ் ஆகவும் உபயோகிக்கலாம்.