பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நித்தியானந்தாவிற்கு ஜாமீனில் வெளியே வர முடியாதபடி ராமநகர் மாவட்ட நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 18) கைது வாரண்ட் பிறப்பித்தது.
தற்போது அவர் எங்கிருக்கிறார் என்ற ரகசிய தகவலும் கிடைத்துள்ளது.
பாலியல் வழக்கு, சிறுமிகள் கடத்தல் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாக இருக்கிறார் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா.
ஆனாலும் அவருக்குச் சொந்தமான ஆசிரமங்கள் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
நித்தியானந்தா பெண் சீடருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் நித்தியானந்தா ஆஜராக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் இதுவரை ஆஜராகவில்லை.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று (ஆகஸ்ட் 18) கர்நாடகாவின் ராமநகர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜாமீனில் வெளியே வர முடியாத அளவுக்கு நித்தியானந்தாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
எங்கிருக்கிறார் நித்தி?
இந்தியாவில் இருந்து தப்பிச்சென்று தலைமறைவான நித்தியானந்தா கைலாசா என்ற நாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அது இன்றுவரை உறுதியாகவில்லை.
இந்நிலையில் அவர் எங்குதான் இருக்கிறார் என்று அவரது சீடர்கள் வட்டாரத்தில் விசாரித்த போது, “தலைமறைவாகியுள்ள நித்தியானந்தா தற்போது தென் அமெரிக்காவின் பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் இருக்கிறார்” என்கின்றனர்.
மேலும் அவர்கள், “நித்தியானந்தாவுக்கு ஜாமீன் வழங்கிய போது உத்தரவாதம் கொடுத்தவர்களின் ஆவணங்களையும், உத்தரவாத தொகையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் நித்தியானந்தாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தனர்.
கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற ஏறத்தாழ 50 விசாரணைகளுக்கு ஆஜராகாமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருந்தார் நித்தியானந்தா.
இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென அவரது முன்னாள் சீடரான லெனின் கருப்பன் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இதுகுறித்து நித்தியானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதில் இல்லாததால் அவரை நேரில் ஆஜர்ப்படுத்த போலீசாருக்கு 2020ல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அப்போது கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா (முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தவர்) நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
திடீர்னு கண்ணு முழிச்சு பாத்தா உலகமே மாறியிருக்கு: நித்தி