கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி பாலத்தை வரும் 30ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார்.
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி கூண்டு பாலத்தை தமிழ்நாடு பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (டிசம்பர் 19) ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவள்ளுவர் சிலை நிறுவி 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியை உலகத்தமிழர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி இவ்விழா கன்னியாகுமரியில் சிறப்பாக நடைபெற உள்ளது. அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து இந்நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.
முதல்வர் வரும் 29ஆம் தேதி தூத்துக்குடிக்கு வருகை தருகிறார். மறுநாள் 30ம் தேதி கன்னியாகுமரி வரும் அவர் முதல் நிகழ்ச்சியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவள்ளுவர் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை திறந்து வைக்க உள்ளார்.
தொடர்ந்து சுற்றுலாத்துறை சார்பில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தின் அருகில் அமைந்துள்ள ஒலி மற்றும் ஒளிக்காட்சிக்கூடத்தை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.
வரும் டிசம்பர் 31ஆம் தேதி காலை திருவள்ளுவர் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது. இதைப் பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து திருவள்ளுவர் குறித்த கருத்தரங்கமும் கலை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது.
இந்த சூழலில் பொதுப்பணித்துறை சார்பில் விழா பந்தல் மற்றும் மேடை அமைப்பது, இருக்கைகள் போடுவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : எஸ்பிஐ வங்கியில் பணி!
கிறிஸ்துமஸ் : எந்த இடத்திலிருந்து எத்தனை சிறப்புப் பேருந்துகள்?