2022ம் ஆண்டுக்கான கன்னட தேசிய கவி குவேம்பு இலக்கிய விருது பிரபல தமிழ் எழுத்தாளர் இமையம் அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்டிர கவி குவேம்பு பிரதிஷ்டனா குப்பலி இலக்கிய அமைப்பு இன்று (நவம்பர் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், “கன்னட தேசீய கவி குவேம்பு இலக்கிய விருது இந்த ஆண்டு தமிழ் எழுத்தாளர் இமையத்திற்கு அளிக்கப்படுகிறது. 2013-ம். ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த விருதை முதலில் பெற்றவர் மலையாள எழுத்தாளர் சச்சிதானந்தன்.
1964-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் கழுதூரில் ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்த இமையம் (வெ.அண்ணாமலை) மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கினார்.
‘கோவேறு கழுதைகள்’ (1994) என்கிற அவரது முதல் நாவல் அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்கிற வண்ணார் சமூகம் பற்றியதாக இருந்தது. மாறிவரும் காலச்சூழல்கள் பழைய இழப்பீடுகளை அசைத்துப் பார்க்கும் விதம், புதிய மதிப்பீடுகளை உருவாக்கித்தரும் வேகம் என்பனவற்றை ஆரோக்கியம் என்னும் ஒரு தாயின் மூலமாகச் சொல்கிறது அந்த நாவல்.
ஆரோக்கியத்துக்கும், அவளுக்குப் பிறகு தனது பல்வேறு படைப்புகளில் இமையம் அறிமுகப்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வாழ்வாதாரமாக இருப்பது அன்பு மட்டும் தான்… தாங்க முடியாத நெருக்கடிகளின்போது அந்த அன்பை அவர்கள் கொஞ்சம் மறந்திருந்தாலும் நெருக்கடி மறைகிற போது அந்த அன்பு அவர்களிடம் தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது.
தன்னைப் பற்றியும், தான் வாழும் இடம், காலம், சூழல் என்பவற்றையும் பற்றிய விசாரணையாகவே தனது எழுத்துக்களைக் கருதும் இமையம் இது வரை ஏழு நாவல்கள், ஆறு சிறுகதைத் தொகுதிகள் மற்றும் ஒரு குறுநாவலை எழுதியிருக்கறார்.
பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் அவரது கதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. அவரது பெரும்பாலான எழுத்துக்கள் பெண்ணினத்திற்கான காணிக்கையாகவே கருதலாம்.
இதில் உச்சமாக இருப்பது செடல் நாவல். பொட்டுக்கட்டி விடப்படும் மரபு இந்தியச்சமூகத்திலும், தமிழ்ச்சமூகத்திலும் எந்த நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் எச்சமாக இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் ஆன்மீகக் கிழிசல் தான் செடல்.

மார்கழிப் பனித்துளியில் தெரியும் சூரியக்கிரணங்களைப்போல தனது படைப்பு உருவ அளவில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் தனிமனிதனின், சமூகத்தின் சாத்தியப்படுகிற எல்லாக்கோணங்களையும் கொண்டு வந்து விடுவார் இமையம்.
அவற்றில் தனித்த தமிழ் அடையாளங்களும் தெரியும். மணியார் வீடு என்ற சிறுகதை உலகத்தரம் வாய்ந்த ஒன்று. வீரமுத்து தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கிற வீடு இதுவரை வாழ்ந்து போன எல்லா மனிதர்களுக்கும் கிடைக்காமலே போன ஒன்று தான் என்பதை அந்தக் கதையிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.
‘இமையம் ஒரு விசித்திரமான எழுத்தாளராகவே தெரிவார். தனது திராவிட அடையாளத்தை மிகப் பெருமையோடு வெளிப்படுத்திக் கொள்பவர். சாதீய ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக விமர்சிப்பவர்.. ஓர் அமைச்சரின் சகோதரர்.
இவை எதுவும் தனது எழுத்துக்களை அண்ட விடாமல் சதுக்கப்பூதமாக நின்று இன்று வரை தனது தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறார். இவரது எல்லா எழுத்துக்களும் ஒரு வகையான விசாரணை தான்.விசாரணைக்குப் பிறகு தானே உண்மை வெளிவரும்? உண்மை தானே இலக்கியத்தின் உயிர்நாடி…”

குவேம்பு அறக்கட்டளை விருது தேசிய அளவில் கவனம் பெற்ற விருது. இப்பரிசு பெற்றதன் மூலமாக தனக்கு மட்டுமல்லாமல் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்திருக்கறார் இமையம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா