பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை (டிசம்பர் 5) திறக்கப்படவுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 13 ஆம் தேதி கள்ளக்குறிச்சி கனியாமூரில் செயல்பட்டு வந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இதனால் போராட்டக்காரர்கள் ஜூலை 17 ஆம் தேதி பள்ளியில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தும் எரித்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக பள்ளி வளாகம் பூட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து இது தொடர்பான வழக்குகளும் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேதமடைந்த பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அதனை அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதாகவும், பள்ளியைத் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஒரு மாத காலத்திற்கு மட்டும் சோதனை முறையில் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நாளை (டிசம்பர் 5) பள்ளி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறவுள்ளன.
பள்ளியில் உள்ள ஏ மற்றும் பி பிளாக்குகளை பயன்படுத்தலாம், ஆனால் ஏ பிளாக் 3வது தளத்தில் இயங்கி வந்த விடுதியைப் பயன்படுத்தக்கூடாது. தீவைத்து எரிக்கப்பட்டதில் மிகுந்த சேதமடைந்த சி மற்றும் டி பிளாக் கட்டிடங்களைப் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கனியாமூர் பள்ளியில் ஏ பிளாக் 3வது தளத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜெடாவத் முன்னிலையில் அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
மோனிஷா
இரட்டை சகோதரிகளுடன் திருமணம்: மாப்பிள்ளை மீது பாய்ந்த வழக்கு!
காதல், திருமண உறவு வழக்கு : டிஜிபி புது உத்தரவு!