இடிக்கப்பட்ட தீண்டாமைச் சுவர்: ஏன்? யாரால் தெரியுமா?

தமிழகம்

திருப்பூர் மாவட்டம் முன்னாள் சபாநாயகர் தனபால் தொகுதியான அவிநாசியில், 20 வருடங்களாக பாதுகாத்து வந்த தீண்டாமை சுவர் கனிமொழி எம்பி அதிரடி உத்தரவால் இடிக்கப்பட்டு வருகிறது.

அவிநாசி சேயூர் ஊராட்சியில் தான் இந்த தீண்டாமைச் சுவர் இருந்தது. சேயூர் ஊராட்சியில் அழகாத்திரிபாளையம், கண்டிங்குளம்புதூர், கிளாகுளம், நட்டுகுட்டையாம்பூர், ஒச்சாம்பாளையம், ஒச்சாம்பாளையம் காலனி, பாளியக்காட்டுபுதூர், பந்தம்பாளையம், போலநாயக்கன்பாளையம், ராக்கம்பாளையம், சாலைப்பாளையம், சந்தைப்பாளையம், வையாபுரிகவுடன்புதூர் சேயூர் ஆகிய பதினான்கு குக்கிராமங்கள் உள்ளன.

இந்த ஊராட்சியில் பட்டியலினத்தவர், அருந்ததியர், கவுண்டர், முதலியார், முத்தரையர் போன்ற சமூகத்தினர் உட்பட சுமார் பத்தாயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

புளியம்பட்டி, கோபிசெட்டிபாளையம், குன்னத்தூர் செல்லக்கூடிய மையப்பகுதியான சேயூர் பகுதியில் பட்டியலினத்தவர் மற்றும் மாற்று சமூகத்தினர் வசித்து வருகின்றனர். சேயூர் விஐபி கார்டன் வழியாக தேவேந்திரன் நகர் மக்கள் போகக்கூடாது என்பதற்காகவே ஒரு தீண்டாமை சுவர் கட்டியுள்ளனர்.

இந்த தீண்டாமைச் சுவரை இடிக்க, கடந்த 20 வருடமாக அங்குள்ள பட்டியலின மக்கள் போராடி வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முதல்கட்டமாக பத்து அடி அளவுக்கு தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது.

தீண்டாமைக்கு எதிராக போராடி வந்த அப்பகுதியை சேர்ந்த மனோன்மணியிடம் நாம் பேசினோம்.

“எங்க ஊரு மக்கள் சேயூர் ரவுண்டானாவுக்கு போய் தான் வெளியூர் மற்றும் டவுனுக்கு பஸ்ல போகனும். அதுக்கு அரை மணி நேரத்துக்கு மேல ஆகும். இந்த தீண்டாமை சுவரை இடிச்சி தள்ளுனா பத்து நிமிசத்துல போய்டுவோம்” என்றவரிடம் “தீண்டாமை சுவர் இருப்பது அரசுக்கு தெரியுமா, அரசுக்கு தெரியப்படுத்தினீர்களா”  எனக் கேட்டோம்.

“போன 20 வருஷமா இந்த தீண்டாமை சுவரை அகற்ற போராடி வர்றோம். ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு, எட்டிப்பார்க்க முடியாத அளவுக்கு தீண்டாமைச் சுவர் எழுப்பியிருக்காங்க.

பிடிஒ, வட்டாட்சியர், கலெக்டர், எஸ்பி என எல்லோருக்கும் மனு அனுப்பினோம், சிலரை நேரடியா சந்திச்சு மனுவும் கொடுத்தோம்,

அவ்வப்போது அதிகாரிகள் வருவாங்க. தீண்டாமைச் சுவரை அகற்றிவிடலாம்னு போவாங்க. ஆனா, திரும்ப வரமாட்டாங்க. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினோம்.

உடனடியா 2023 நவம்பர் 27 ஆம் தேதி பிடிஒ, தாசில்தார், போலிஸ் வந்தாங்க. சுவரைப் பாத்து ஆய்வு செஞ்சிட்டு, இது தீண்டாமை சுவர்தான் ஒரு வாரத்துல அகற்றிடுவோம்னு சொன்னாங்க. ஆனா அவங்க திரும்ப வரலை.

நேத்து (பிப்ரவரி 10) அவிநாசி பப்பிஸ் திருமணம் மண்டபத்துல கனிமொழி எம்பி மக்கள் குறைகளைக் கேட்கிறதா தகவல் தெரிஞ்சது. உடனடியா எங்க ஊரு மக்களோட அங்க போனோம். விவசாயிகள், பொதுமக்கள், ரோட்ரி சங்கத்தினர், டையிங் தொழில் செய்பவர்கள்னு நிறைய பேரு அங்க கூடியிருந்தாங்க.

நாங்க உள்ள போய், கனிமொழி எம்பிக்கிட்ட, ‘அம்மா…. எங்க ஊருல உள்ள 20 வருஷ தீண்டாமை சுவர் பிரச்சனையை யாரும் தீர்க்கலை. அதிகாரிகள் முதல் அனைவரும் ஏமாத்துறாங்கன்னு’ மனு கொடுத்தோம்.

மனுவை படிச்சு பார்த்துட்டு  ‘தீண்டாமைச் சுவரானு ஆச்சரியமா கேட்டாங்க’ உடனே கலெக்டர் கிறிஸ்துராஜ்க்கு போன் போட்டு, ‘நான் கனிமொழி எம்.பி பேசுறேன், அவிநாசி ஒன்றியம் சேயூர் ஊராட்சியில தீண்டாமை சுவர் இருக்கிறத நீங்களும் உறுதி செஞ்சிருக்கீங்க, முதல்வருக்கும் மனு கொடுத்துருக்காங்க. அவரும் நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்காரு. அப்புறம் ஏன் தீண்டாமை சுவரை அகற்றலைனு’ கேட்டாங்க.

எதிர் முனையில பேசுன கலெக்டர்,’உடனே அகற்றிவிடுறோம் மேடம்னு’ சொன்னாரு. ‘எப்போது அகற்றுவீங்க..  எவ்வளவு நேரம் ஆகும்னு’ கனிமொழி எம்பி கேட்கும் போது, ’இரண்டு மணி நேரம் டைம் கொடுங்க மேடம். உடனே அகற்றிரோம்னு’ கலெக்டர் சொன்னாரு.

சரியா ஒரு மணி நேரத்துல ஜெசிபி இயந்திரத்தோட அதிகாரிங்க ஸ்பாட்டுக்கு வந்தாங்க. கொஞ்சம் தூரம் இடிச்சிட்டு மீதி வழியை நாளைக்கு அகற்றிரோம்னு சொல்லிட்டு போனாங்க. மனுகொடுத்த உடனே  நடவடிக்கை எடுத்த கனிமொழி எம்பி அம்மாவை அதே மண்டபத்துல சந்திச்சி நன்றி சொன்னோம்” என்றார்.

“இந்த தீண்டாமை சுவரை இடிக்காமல் 20 வருடங்களாக பாதுகாத்தது யார், ஊராட்சி மன்ற தலைவர் ஏதும் கேட்கவில்லையா” என அவரிடம் நாம் கேட்டோம்.

“சேயூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தான் அவிநாசி ஒன்றிய அதிமுக செயலாளர் வேலுசாமி, இவர் தான் தீண்டாமை சுவரை தனது அதிகாரத்தால் இடிக்காமல் தடுத்து பாதுகாத்து வந்தார். இந்த தொகுதி எம்எல்ஏவும் முன்னால் சபாநாயகரான தனபாலால் இதைக் கேட்க முடியவில்லை” என்றார் ஆதங்கத்துடன்.

தீண்டாமை சுவரைப் பற்றி அதிமுக எம்எல்ஏ தனபாலைத் தொடர்புகொண்டு கேட்டோம், “அப்படியா… எனக்கு தகவல் ஏதும் வரவில்லை, விசாரித்து பார்க்கிறேன்” என்றார்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

‘பிரமயுகம்’ ட்ரெய்லர் எப்படி?

U19 World Cup Final:ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா?

+1
0
+1
1
+1
0
+1
9
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *